Header Ads



கிழக்கு முஸ்லிம் Mp க்களுடன் ரணில் சந்திப்பு - பல்வேறு விடயங்கள் பேச்சு



- நூருல் ஹுதா உமர் -


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்களுக்கிடையிலான சந்திப்பு இன்று -06- காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 


இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். அதாஉல்லா, எம்.சி. பைசால் காஸிம், செய்யத் அலிஸாஹிர் மௌலானா, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுனபின் ஆகியோர் பங்கேற்றதுடன் கிழக்கு மாகாண முஸ்லிங்களின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு நீண்டநேரம் ஆராயப்பட்டதுடன் கிழக்கு மாகாண அண்மைய இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைகள், கிழக்கு மாகாண சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமன விடயங்கள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட முஸ்லிங்களின் காணி பிரச்சினைகள், மூடப்பட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதி வழங்கும் விவகாரம், மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேம்பாட்டு விடயங்கள், எனப்பல சமூக நல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு ஆராயப்பட்டது. 


இவற்றில் பல விடயங்களுக்கு முழுமையான தீர்வும், சில விடயங்களுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதுவிடயமாக கிழக்கு மாகாண ஆளுநருக்கும்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான சந்திப்புக்கள் ஊடாக முஸ்லிங்களின் பிரச்சினைகளை பேசி தீர்க்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். மேலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான போதுமான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கும் விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 


இந்த சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.