Header Ads



கோட்டாவின் புத்தகத்திலிருந்து மேலும் சில பகுதிகள்




வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று வெளியிட்ட தனது நூலில் தெரிவித்துள்ளார். 


''ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி'' என்ற பெயரிலான இந்த நூல் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 


மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் இராஜினாமா செய்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 


தாம் பதவி விலகக்கூடாது என வலியுறுத்திய பிரதான சர்வதேச வல்லரசு ஒன்றும் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 


அந்த சர்வதேச வல்லரசு இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராகி இருந்ததை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


அவ்வாறான நிலையிலும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக தாம் பதவி விலகியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.


''ஒரு சில வல்லரசு நாடுகள் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சியின் காவல் தெய்வங்களை போன்று உலக அரங்கில் தம்மை காண்பிக்கின்றன. ஜனநாயகம், சட்டவாட்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் சம்பளம் பெறும் செயற்பாட்டாளர்கள் வலையமைப்பொன்றை அந்த நாடுகள் பராமரிக்கின்றன. உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பதிலாக தமது தேவைகளையே நிறைவேற்றிக்கொள்கின்றனர்''


என அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 


தம்மை பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள்  சிலவற்றையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நூலில் எழுதியுள்ளதுடன், மிரிஹானையிலுள்ள தனது வீட்டிற்கு முன்பாக  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை அவ்வாறாதொரு சம்பவம் எனவும் கூறியுள்ளார். 


''இரவு 8 மணியளவில் பெங்கிரிவத்த வீதியை நெருங்கிய பேரணியில் குறிப்பிடத்தக்களவானவர்கள்  இணைந்திருந்தனர். இந்த அனைத்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை அதிகாரிகள் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். நடப்பதை நான் ஷவேந்திரவுக்கும் கமலுக்கும் கூறினேன். ஷங்ரிலா ஹோட்டலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரெஷ் சலே மிரிஹான​விற்கு வந்தார். அவர் வருகின்றபோது அந்த இடத்தில் சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாத்திரமே இருந்தனர். எனினும், அங்கிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவ அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் எவரும் ஆலோசனை வழங்கியிருக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து சலே -  ஷவேந்திரவுக்கும் கமாலுக்கும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி அங்கு வந்திருந்தவர்களை காண்பித்தாலும் அவர்களை கலைப்பதற்கான ஆலோசனை உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து கீழ்மட்டத்திற்கு வரவில்லை''


என கோட்டாபய ராஜபக்ஸ விபரித்துள்ளார். 


இராணுவத்தளபதி , பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி , பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மறுநாள் முற்பகல் 10.30 மணியளவிலேயே தமது இல்லத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


இதேவேளை, இராணுவ தலைமையகத்தில் இருந்த நடவடிக்கை நிலையத்தை கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றுமாறு 2022

ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


மே மாதம் 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் இருந்த முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இராணுவத்தினரை வரவழைக்கும் ​போது ஏற்பட்ட சீரற்ற அனுபவம் காரணமாக அனைத்து பாதுகாப்பு பிரதானிகளையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து நடவடிக்கை நிலையத்தை அங்கிருந்து செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் கூறியுள்ளார். 


2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர் , முப்படைத் தளபதிகள் , பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் இந்த நிலையத்தில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


எனினும், மக்கள் கொழும்பிற்கு வருவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 


''அனைத்து பிரவேச மார்க்கங்களையும் தடுப்பதனூடாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு வருவதை தடுப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. எனினும், இத்தகைய வீதித்தடைகள் எந்த ஒரு இடத்திலும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வித இடையூறும் இன்றி ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தனர்''


என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 


தாம் பதவி விலகும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்த எரிபொருள் , எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் தெரிவித்துள்ளார்.


''மூழ்கும் கப்பலிலிருந்து நான் தனியாக தப்பிச் சென்றதாக ஒரு சில குழுவினர் கூறினாலும் நான் இராஜினாமா செய்யும்போது இலங்கை ஒருபோதும் மூழ்கிக்கொண்டிருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் என்னை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக நாடு பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கு ஆரம்பித்திருந்த சந்தர்ப்பத்தில் மூலோபாய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது. நான் இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக ஒரு உயிரையேனும் இழப்பது அர்த்தமற்ற செயலாக இருந்தது''

No comments

Powered by Blogger.