ஹூதிகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களை, இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர்.
சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் நேரப்படி நேற்று முன்தினம் (07) காலை 11.30 அளவில் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலால் கப்பலின் கட்டுப்பாட்டு அறையை அண்டிய பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் யேமனிலுள்ள ஏடன் துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது.
23 பேரைக் கொண்ட பணியாளர்கள் கப்பலில் இருந்துள்ளதுடன், அவர்களுள் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்களாவர். நேபாள பிரஜை ஒருவரும் அதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வியட்நாம் பிரஜைகள் நால்வர், பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 15 பேர், இந்திய பிரஜை ஒருவரும் குறித்த கப்பலில் இருந்துள்ளனர்.
கப்பலில் இருந்த பணியாளர்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கொல்கத்தா போர்க் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment