Header Ads



பாத்திமா நாயகியின் இறுதி நிமிடங்கள் - படித்தவர்கள் அனைவரையும் கண்ணீரை சிந்தவைத்த தருணம்


முத்து நபியின் ஈரல் துண்டு என்று வர்ணிக்கப்படும் பாத்திமா பீவி (ரலி) எனும் நாயகத்தின் அன்பு  மகள் திருமண வயதை அடைந்ததும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி (ரலி) அவர்களை மருமகனாக தேர்ந்தெடுத்தார்கள்.  முன்மாதிரியான தாம்பத்திய வாழ்க்கை.  பாத்திமா பீவியின் கடைசி நிமிடம் யாரையும் அழ வைக்கும்.


ஒரு நாள் அலி (ரலி) வீட்டிற்குச் சென்றபோது, ​​பாத்திமா பீவி (ரலி) அவர்கள் மும்முரமாக தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். தனது குழந்தைகளான ஹசன், ஹுஸைனை குளிப்பாட்டுகிறார்கள், தலையை துடைத்து விட்டு, அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறார்கள்.  இதற்கிடையில் குப்பூஸும் தயாரிக்கிறார்கள்.


சிறு குழந்தைகளைக் கொண்ட அனைத்து தாய்மார்களின் நிலையும் இதுதான்.  ஆனால் பாத்திமா பீவி (‌ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களைப் பார்த்ததும் அவரைப் பார்த்தது போல் காட்டிக்கவில்லை.


பொதுவாக அலி (ரலி) அவர்களைப்  பார்த்தாலே அன்பால் மூழ்க செய்பவர் இன்றைக்கு என்னாச்சு என்று யோசித்துக்கொண்டே அலி(ரலி) கேட்டார்கள்:


பாத்திமா.. என்னைப் பார்த்த பிறகும் 

ஏன் மௌனமாக இருந்தாய்?  

இப்படி நீ  இருப்பதில்லையே.. 

இதுதான் முதல் 

முறையாக‌ இருக்கிறது...

என்று சொல்ல

இதைக் கேட்ட பாத்திமா பீவி (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் ஒரு‌ விருந்துக்கு செல்ல உத்தேசித்துள்ளதால், இப்போதைக்கு உங்களையும், குழந்தைகளையும் கூட்டிச் செல்ல இயலாது...

செல்வது நல்லது, எப்போது திரும்பி வருவீங்க..

என்று கோபம் கொள்ளாமல் 

கேட்டார்கள் அலி(ரலி) அவர்கள்..

நாமாக இருந்திருந்தால், 

அடியும், ஏச்சுமாக  நிலைமை மோசமாகியிருக்கும்.  

இதனால்தான் இந்தத் திருமண வாழ்க்கையில் நமக்கு ஒரு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அறிஞர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கியாமத் நாள் வரை நான் திரும்ப மாட்டேன்.

இடி விழுந்தது போன்ற பதில்..

அலி (ரலி) அவர்கள் திகைத்து போய் நின்றார்கள்..

என்ன பாத்திமா சொல்கிறாய்..? இதையெல்லாம் உனக்கு யார் சொன்னது..?

கண்கள் நிறைந்த நிலையில் பாத்திமா பீவி கூறுகிறார்கள்: நான் என் வாப்பாவை (முத்து நபி) கனவு கண்டேன்.

ரொம்ப நாளாகிவிட்டது..

உன்னை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது..

உன்னை பார்க்க காத்திருக்கிறேன்!!! என்று கூறினார்கள் என சொல்ல...

இதைக் கேட்ட அலி (ரலி) அவர்களும், பாத்திமா பீவியும் கண்ணீர் விட்டு அழுதனர்.. வானம் கருத்தது, பூமி நடுங்கியது..

நான் என்  உயிரை விட  நேசித்த என் அன்புச்  செல்லம் என்னை விட்டு பிரிகிறதா..? 

அலி (ரலி) என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்...

அழுதுகொண்டே அலி (ரலி) அவர்கள்  தன்னைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.  "எல்லோரும் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்பவர்கள்தான், இருப்பினும் நீ போனால் நான் இவ்வுலகில் இல்லாத்தவனைப் போலவே.நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்.

எனக்கு அழகான இரண்டு நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், 

எனது மிகுந்த வறுமையிலும் எவ்வித குற்றம், குறையும் சொல்லாமல் எனக்கு துணையாக நின்றவள்

அலி (ரலி) அவர்கள் துக்கத்தின் உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

பாத்திமா பீவி (ரலி) அவர்கள் தன் குழந்தைகளை அழைத்து இருவரையும் தன் மடியில் அமர்த்தினார் கள்.தன்னையறியாமல் அப்பாவியாகச் சிரித்துக்கொண்டிருந்த தன் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார்கள் பாத்திமா பீவி.

நான் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றால் என் குழந்தைகளை யார் குளிப்பாட்டுவா, ஆடைகளை யார் அணிவிப்பா.. என்று சொல்லி பாத்திமா பீவி (ரலி) அழுதுகொண்டே தன் குழந்தைகளுக்கு துரு துருவாக முத்தமிட்டார்கள்...

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கணவர் அலி (ரலி) வேதனையில் மூழ்கி போனார்கள்...

"மரணம் வரும் என்று எனக்குத் தெரியும், ஆனால்  அன்பானவர்களின் இழப்பை என்னால் ஒருபோதும் தாங்க முடியாது" ... என்று

அலி (ரலி) கனத்த இதயத்துடன் கூறினார்கள்:

பாத்திமா நீ கிளம்புகிறாயா?நாளைக்கு உன் வாப்பாவை சந்திக்கும் போது  நானும் விரைவில் அவர்களிடம் வர விரும்புகிறேன் என்றும், அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று என் வாழ்க்கையில்  ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடும்படி சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்...

மேலும் ... உனது கம்பீரத்தை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, என்னைப் பற்றிய குறைகளை நாயகத்திடம் சொல்லாதீர்கள். 

நான் ஒரு பரம ஏழை.நான் ஏதாவது உங்கள் மனம் நோகும்படி நடந்திருந்தால் அல்லாஹ் ரஸுலுக்காக என்னை மன்னிக்கவும்...

நான் நாளை மஹ்சராவுக்குச் செல்லும்போது, ​​​​நன்மைகள் ‌இல்லாமல்  கவலைப்படும்போது, ​​​​இந்த ஏழையையும் கருத்தில் கொள்ளுமாறு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீ சொல்ல  வேண்டும்.


சங்கை உடைக்கும் இந்த வார்த்தைகளைக் கூறும்போது அலி (ரலி) கண்ணீர் விட்டு அழுதார்கள்...

இதையெல்லாம் கேட்டு தாங்க இயலாமல்  பாத்திமா பீவியும் அழுகின்றார்கள்..

“ஓ அலியார், நான் உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

நான் மரணிக்கும் போது நீங்கள் தான் என் மய்யித்தை கஃபன் செய்து நல்லடக்கம்  வேண்டும்.

நான் இறந்தால் என் பிள்ளைகள்  அனாதையாகி விடுவார்கள்..

எனவே அனாதை குழந்தைகளை கண்டால் அவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்க வேண்டும்.. அந்நேரம் என்னையும் நினைவு கூற வேண்டும்.

உங்கள் மனம் நோகும்படி நான் நடந்திருந்தால் அல்லாஹ் ரஸுலுக்காக என்னை மன்னிக்கவும்..

அதுபோல என் செல்லங்களான ஹஸன், ஹுஸைனை ஒரு போதும் நீங்கள் அடித்து விடாதீர்கள்..

பாத்திமா பீவி (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள், 

நான்  வாப்பாவையும் வானத்திலுள்ள 

வானவர்களையும் பார்த்தேன்..

இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்.  

என் அலமாரியில் ஒரு துண்டு காகிதம் உள்ளது, அதை  கொண்டு வரலாமா?

அலி (ரலி) அவர்கள் அதைக் கொண்டு வந்து ஒப்படைத்த போது ஃபாத்திமா பீவி‌( ரலி) கூறினார்கள்: நீங்கள் என்னை நல்லடக்கம் செய்யும் போது இந்த காகிதத்தை என் கப்ரில் வைத்து நல்லடக்கம் செய்ய வேண்டும்.

இதை பார்வையிட உங்களுக்கு அனுமதி இல்லை.இது பரம ரகசியம்.

அந்த காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறது அதை தனக்கு சொல்ல வேண்டுமென அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்...

அன்பரே, நம்  திருமணத்திற்கு முன் வாப்பா என்னிடம் கேட்டார்கள்: நான் உன்னை அலிக்கு 400 திர்ஹம் மஹர் கொடுத்து திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன், உனக்கு திருப்தியா?

எனக்கு அலியார் திருப்தி  வாப்பா.. 

ஆனால் திர்ஹம் எனக்கு திருப்தி இல்லை. என்றேன்..

உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கூறினார்கள்: 

அல்லாஹ் பாத்திமா பிவீக்காக சொர்க்கத்தையும் அதிலுள்ள அனைத்தையும் மஹராக ஆக்கிவிட்டான்.

ஆனாலும் பாத்திமா பீவி விடுவதாக இல்லை..

எனக்கு திருப்தி ஏற்படவில்லை.

என்று பதிலளித்தார்கள்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று

நபி (ஸல்) அவர்கள் மிகவும் மென்மையாக பாத்திமா பீவியிடம் கேட்டார்கள்: 

உங்கள் உம்மத்தின் பரிந்துரையை (ஷஃபாஅத்) நான் உறுதிப்படுத்த வேண்டும்.  அதைத்தானே நீங்களும் அதிகம் விரும்புகிறீர்கள்...

உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு கடிதத்துடன் வந்தார்கள், அதில் உம்மத்துக்கு பரிந்துரை உண்டு என்று எழுதப்பட்டிருந்தது.

நான் அந்த காகிதத்தை கொண்டு மஹ்சரில் இறைவனிடம் சமர்ப்பணம் செய்வேன்..

நியாயத்தீர்ப்பு நாளில் யாரோ ஒருவர் அழைத்துக் கூறுவார்..

ஓ சமூகமே... ஃபாத்திமா பீவி ஸிராத் பாலம் கடந்து செல்லும் வரை  உங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.  அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் கவனமாக இருந்தவர்கள்..

நினைவுகள், கடந்த கால வாழ்க்கையைக் கூறி இருவரும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

திடீரென்று, பாத்திமா பீவி தன் பணிப்பெண்ணிடம் வேறு யாரையும் அறைக்குள் விட வேண்டாம் என்று கூறிவிட்டு, நான் திக்ர், ஸலாத் ஓதி படுத்துகிறேன் என்று கூறி முத்து நபி பயன்படுத்திய வாசனை திரவியத்தை புரட்டி முகத்தை துணியால் மூடிக்கொண்டார்கள்..

நேரம் கடந்து செல்கிறது. பாத்திமா பீவி இவ்வுலகை விட்டுச் செல்கிறார்கள். ரூஹை  பிடிக்கும்படி அல்லாஹ்  கட்டளையிடுகிறான்..

முத்து நபியின் அழகிலும், நடையிலும், செயலிலும் இசைந்திருந்த முத்து நபியின் மகள் பிரிந்து செல்வதை அறிந்ததும், வானமே அழுதது, பூமி அதிர்ந்தது, அனைத்து உயிரினங்களும் விதும்பின..

ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும்

உம்மி... லுஹா தொழுகைக்கு நேரமாகிவிட்டது, எழுந்திருங்கள்.... பொன்னும்மா இவ்வுலகை விட்டுச் சென்றதை அறியாமல் மீண்டும் அழைக்கிறார்கள் அந்த அப்பாவி குழந்தைகள்.

உம்மாவின் முக மக்கனாவை நீக்கி முகத்தைப் பார்த்தபோது அந்தச் சூழல் முழுவதும் பிரகாசமாக இருந்ததை வலியுடன் அவர்கள் உணர்ந்தார்கள், இல்லை... உம்மா இனி திரும்பி வரமாட்டார்கள்...

இருவரும் கதறி அழுகிறார்கள், 

அண்டை வீட்டார்களும்,

ஊர்வாசிகளும்

தங்கள் அன்புக்குரியவரை இழந்து வருந்துகிறார்கள்.  தகவலறிந்து அலி (ரலி) மசூதியை விட்டு வெளியே வந்தார்.

தன் காதலியின் முகத்தைப் பார்த்து கதறி அழுதபோது, ​​கடந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது.

அலீ (ரலி) அவர்களே "பாத்திமா சொர்க்கத்திலும் உங்கள் மனைவியாக இருப்பார்" .

அலி (ரலி) அவர்களே பாத்திமா பீவியின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்..

பாத்திமா பீவியின்‌ வாழ்க்கையில் அந்நிய  எந்த ஆணும் அவரது அவ்ரத்தை பார்த்தது இல்லை.. இந்நிலை அவருடைய மரணத்தின் போதும்  தொடர்ந்தது..

அல்லாஹ் பாத்திமா உம்மாவின் பறக்கத்தைக் கொண்டு நமக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவானாக...

நண்பர்களே, 

மரணத்தில் கூட நம் சொந்த இரட்சிப்புக்காக மட்டுமே பேசியவர், தனது வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைப் பார்க்காமல் கவனமாக இருந்தவர், 

கணவரின் வறுமையிலும் குற்றம் குறைகள் சொல்லாமல்  துணை நின்ற பொன்னும்மா பாத்திமா பீவி (ரலி) அவர்கள் நமக்கு முன்மாதிரி.

அவர்களை சொர்க்கத்தில் சந்திக்கும்   பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்குவானாக..

ஆமீன்..

தமிழில்:M.சிராஜுத்தீன்அஹ்ஸனி...

             

No comments

Powered by Blogger.