ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோத்தா - முஸ்லிம் அரசியல்வாதிகள் கடும் விமர்சனம்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
நாட்டில் ஜனாதிபதி பதவியிலிருந்த கோத்தாபய ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல தமிழ் சமூகமும் பல்வேறு நெருக்குவாரங்களுக்குள்ளாகின. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கும் செயற்திட்டங்களிலேயே அவர் கவனம் செலுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில் எமது சமூகம் பீதியுடனே காலத்தை கடத்தியது.
ஈற்றில் அவர் தனது சொந்த சமூகத்தின் இளைஞர்களால் வழிநடாத்தப்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் விளைவாகத் துரத்தியடிக்கப்பட்டார்.
நாடு தழுவிய ரீதியில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக நாட்டைவிட்டுத் தப்பியோடி பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் நூலை கடந்த வாரம் வெளியிட்டார். ஆங்கில மொழியிலும், சிங்கள மொழியிலும் இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலில் அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் அவரை வெளியேற்றுவதற்கு மேற்கொண்ட அரகலய போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டும் வெளியேறிய விதம், அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள், கொரோனா தொற்றில் மரணமான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாமல் எரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம், வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களையும் அவரது பார்வையின் அடிப்படையில் நூலில் உள்வாங்கியிருந்தார்.
நூலில் கோத்தபாய எழுதியிருப்பது என்ன?
“அரகலய போராட்டத்திற்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்தது. ஏனெனில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழர்களும் பொது பல சேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்களும் என்னை எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் என்னை விரோதியாகவே பார்த்தார்கள். எனவே நான் பதவியில் தொடர்ந்தால் சிங்கள பெளத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக் கூடும்”என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
“2012ஆம் ஆண்டு பொதுபலசேனா அமைப்பு உருவானது. அந்த அமைப்புடனான தொடர்பின் காரணமாக நான் முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டேன். 2019 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கே வழங்கப்பட்டன. இதனை நான் ருவன் வெலிசாய புனித தலத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தேன். சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளினாலேயே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் என்பதனையும் கூறினேன்.
ஜனாஸா எரிப்பு
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது தகனம் செய்யப்பட வேண்டும் என்று எனது ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அவர்களது மதத்தின்படி உடல்கள் தகனம் செய்யப்படக் கூடாது. அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
நான் முஸ்லிம்களின் கொவிட் தொற்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் எமது சுகாதார பிரிவின் நிபுணர்கள் கொவிட் தொற்று ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டால் கொவிட் வைரஸ், நிலத்தடி நீருக்குள் கலக்கும் என்று கூறி ஜனாஸாக்களை எரிப்பதற்கு உத்தரவிட்டார்கள்.
ஜனாஸாக்கள் எரிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கொன்கிரீட் பெட்டியொன்று அமைத்து அதற்குள் ஜனாஸா அடக்க முடியும் என்ற யோசனையையும் நான் நிபுணர் குழுவுக்கு முன்வைத்திருந்தேன். ஆனால் சுகாதார பிரிவு அதனை அனுமதிக்கவில்லை. குறிப்பாக நிபுணர் குழுவின் பேராசிரியர் மெத்திகா விதானகே தான் இந்த நிலைமைகளுக்குக் காரணம் எனவும் கோத்தாபய ராஜபக்ஷ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் தனது நூலில் எழுதியுள்ளார். ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் என்மீது பல தரப்புகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனக்கும் கர்தினாலுக்கும் இடையில் சுமுகமான தொடர்புகள் இருந்தன. கர்தினாலுக்கு என்மீது விசுவாசம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ள கோத்தாபய தனது நூலில் அது தொடர்பான சாட்சியங்களையும் முன்வைத்துள்ளார்.
கர்தினால் உடனான எனது தொடர்பு மற்றும் அவர் என்மீது வைத்துள்ள உறவுகள் – சிலர் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் உண்மையை திரித்து வழங்கிய சாட்சியங்களின் காரணமாகவே சீர்குலைந்தன.
இதன் காரணமாக விசாரணை நடவடிக்கைகள் மீதிருந்த நம்பிக்கை மூழ்கடிக்கப்பட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவோர் சூழ்ச்சி என்பது அனைவரதும் கருத்தாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்பு என்னுடன் உறவுடன் இருந்த கர்தினாலும், கத்தோலிக்க ஆலயத்தைச் சேர்ந்த சிலரும் ஏன் எனக்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் என்பது உண்மையிலேயே பிரச்சினைக்குரியது என்றும் கோத்தாபய தனது நூலின் 136ஆம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தான் பதவியில் இல்லாத காலத்தில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பதாகவும் கோத்தாபய குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவரது பதவிக் காலத்தில் நடந்தவைகளுக்கு எதிரானவையாகும். ஆனால் எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் நான் பதவியில் இல்லாத போது நடந்தவைகள் பற்றியதாகும். இது பைத்தியக்காரத்தனமானதாகும். இந்த நாட்டுக்கு நல்லது நடக்காது’ என்றும் நூலின் 152 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தான் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒன்று எனக் குறிப்பிடுபவர்கள் பற்றியே அவர் இந்நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.
மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் காரணமாக நாடு பிளவுபடுவதற்கு வாய்ப்புண்டு. இதுவோர் நல்ல நிலைமை அல்ல. சிறுபான்மை வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசு நாட்டை ஆட்சிசெய்யும் போது இதுபற்றி அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா அவதானம்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெளியிட்டுள்ள புத்தகம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வெளிநாட்டுத் தூதுவர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோத்தபாயவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ரஷ்ய தூதரகம் கோரியுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவின் குறிப்பிட்ட கருத்து எந்தெந்த நாடுகளின் இராஜ தந்திரிகளை சுட்டிக்காட்டுகிறது என ரஷ்ய தூதரகம் கேள்வியெழுப்பியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் திரண்டு போராட்டங்களை நடத்தினர். அரகலய போராட்டத்தினையடுத்தே கோத்தாபய ராஜபக் ஷ நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்.
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற அவர் சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அவர் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் தன்னை பதவியிலிருந்தும் வெளியேற்றுவதற்கு சர்வதேச சதியொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதாக ரஷ்ய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கோத்தாபய ராஜபக்ஷ தனது நூலில் ‘சில பலம்வாய்ந்த நாடுகள் தாம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று உலகுக்கு கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதில்லை. அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சுயநலமாகச் செயற்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நான் பதவியில் அமர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்த மூன்று பிரதான காரணிகள், நான் எனது பதவியை இராஜினாமா செய்து விட்டதன் காரணமாக தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளன. அதாவது சிங்களவர்களும், சிங்கள பெளத்தர்களும் தங்களது சொந்த நாட்டினுள் அவமானத்துக்குள்ளாகி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை, நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ளமை, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய பாதுகாப்பு சவாலுக்குள்ளாகியுள்ளமை என்பனவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளை எதிர்காலத்தில் மற்றுமொரு தலைவரும் தீர்த்து வைக்க வேண்டியேற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொள்ளப்படவேண்டிய பொருளாதாரத் தீர்வுகள் தொடர்பிலும் நூலில் அவர் விபரித்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர்
பைசர் முஸ்தபா
“கோத்தாபய ராஜபக்ஷ ஒரு புத்தகமல்ல பத்து புத்தகங்கள் எழுதினாலும் முஸ்லிம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களும் அவரை மன்னிக்கமாட்டார்கள். அவரை ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள்” என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ எழுதி வெளியிட்டுள்ள நூல் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ‘இவரது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் பழி வாங்கப்பட்டது. எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் நாட்டு மக்களால் நாட்டிலிருந்தும் விரட்டப்பட்ட ஒரே தலைவர் அவர். முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இவரது பதவிக்காலத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி எரிக்கப்பட்டன. அன்று முஸ்லிம் சமூகம் கண்ணீர் சிந்தியது. இன்று முஸ்லிம் ஜனாஸாக்களின் எரிப்புக்கு காரணம் சுகாதார பிரிவின் பேராசிரியர் மெத்திக்காவே என்கிறார். கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்தால் நிலத்தடி நீர் மூலம் கொவிட் தொற்று பரவும் என்று கூறியே அத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அன்று கோத்தாபய ராஜபக்ஷவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியில் இருந்தார். அவர் நினைத்தருந்தால் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தீர்மானத்தை மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ அன்று மெளனமாகவே இருந்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ முன்னாள் இராணுவ வீரர். அவர் தனது அடக்குமுறை ஆட்சியால் நாட்டுமக்களின் ஆதரவினை இழந்து விட்டார். மீண்டும் அரசியல் இலாபம் கருதியே புத்தகம் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டார்கள்.
பலவந்தமாக, கொவிட் தொற்றினைக் காரணம் காட்டி எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களின் கண்ணீர் கோத்தாபய ராஜபக்ஷவை விட்டு வைக்காது. இறைவனின் தண்டனை அவருக்குக் கிடைக்கும்.
புத்தகம் ஒன்று எழுதுவதற்குக் கூட அறிவில்லாத அவர் எப்படித்தான் இந்தப் புத்தகத்தை எழுதினார் என்று தெரியவில்லை. நாட்டு மக்களினால், குறிப்பாக முஸ்லிம்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர் அவர். அவரது கருத்துகள் எதுவும் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முற்றிலும் நிராகரிக்கப்படும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் முஸ்லிம்கள் அவரை நிராகரிப்பார்களே தவிர ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மன்னிக்கமாட்டார்கள். அவர் எழுதியுள்ள நூலில் முஸ்லிம்களை சமாதானப்படுத்த தெரிவித்துள்ள கருத்துகளை முஸ்லிம் சமூகம் நிச்சயம் முற்றுமுழுதாக நிராகரிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
நாட்டில் முஸ்லிம் சமூகத்தை ஓரம் கட்டும் செயற்பாடுகளையே அவர் முன்னெடுத்தார். ஜனாஸா எரிப்பு காலகட்டத்தில் அவரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி.
முஸ்லிம்களின் கொவிட் ஜனாஸாக்களை எரிப்பதற்கு உத்தரவிட்டவர் அவரே. இன்று பேராசிரியர் மெத்திகா மீது குற்றம் சுமத்துகிறார். மெத்திகா இவ்வாறான ஒரு தீர்மானம் மேற்கொண்டாலும் இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை தடுத்திருக்கலாம்.
பொதுபலசேனா அமைப்போடு நெருங்கிச் செயற்பட்டவர் கோத்தபாய. அவ்வமைப்புக்கு உதவிகள் செய்தவர். ஜெய்லானி பள்ளிவாசலின் கட்டிடங்களை அகற்றியவர். ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை உருவாக்கி அதன் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்து நாட்டில் ஒரே சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று செயற்பட்டவர். தனியார் சட்டங்களை இல்லாமற் செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயற்பட்டவர். இக்காரணங்களால் முஸ்லிம்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று ஞானசார தேரரும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அல்லாஹ்வையும், புனித குர்ஆனையும் அவமதித்தவர். முஸ்லிம்கள் ஞானசார தேரரை மாத்திரமல்ல அவரோடுள்ள கோத்தாபயவையும் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
‘அரகலய’ போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் வகிபாகமே மேலோங்கியிருந்ததாகக் கூறுவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் உறங்கிக்கொண்டிருக்கும் இனவாதத்தை தூண்டி மீண்டும் ஆட்சி பீடமேறுவற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ முற்படுவதாக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அப்போராட்டத்தை ஒருங்கிணைந்து வழி நடாத்திய தலைவர்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்க அளவில் தமிழர்கள் எவரும் இருக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோத்தாபய ராஜபக் ஷ தனது நூலில் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.
‘அரகலய’ போராட்டம் இன மத வேறுபாடின்றி நாட்டு மக்கள் கலந்து கொண்ட போராட்டம் என்று தெரிவித்துள்ளனர்.
பொதுபல சேனா உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் அதன் பின்னணியில் கோத்தாபய ராஜபக் ஷ இருப்பதாக நம்பப்பட்டதாகவும் எனவே தற்போது பொதுபல சேனாவின் எழுச்சியை அடுத்து முஸ்லிம்கள் என்னை விரோதியாகப் பார்த்தார்கள் எனக் கூறுவதன் மூலம் அவர் அதனை உறுதிப்படுத்துகின்றாரா? என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் சமூகம்
நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மீண்டும் நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய எத்தனை நூல்கள் எழுதினாலும் முஸ்லிம் சமூகத்தை அவரால் சமாதானப்படுத்த முடியாது.
முஸ்லிம் சமூகத்தையே குறிவைத்து செயற்பட்ட பொதுபல சேனாவின் ஆதரவாளர் அவர். ஞானசார தேரருடன் நெருங்கிச் செயற்பட்டவர். தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தனது அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் தலைமையில் செயலணியொன்றினை நிறுவி அது தொடர்பான சிபாரிசுகளைக் கோரியவர். அச்செயலணியின் அறிக்கை முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அரபுக்கல்லூரிகளின் செயற்பாடுகளுக்கும் பாடத்திட்டங்களுக்கும் சவாலாக அமைந்திருந்தது.
ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் மன நிறைவு கண்டவர் அவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படுபவர். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த அவரால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான முன்னெடுப்புகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அசைந்து கொடுக்கவில்லை. இன்று ஜனாஸா எரிப்பு விவகாரத்தை சுகாதார பிரிவின் நிபுணர்களின் மீது சுமத்திவிட்டு நழுவப் பார்க்கிறார். அவர் என்னதான் எழுதினாலும் முஸ்லிம் சமூகம் அவரை ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.- Vidivelli
கோதா என்பவன் ஒரு වැඩ බෙරි ටාසන් என்பதை அவனுடைய மனோநிலை தௌிவாகக் காட்டுகின்றது. எந்தத் தவறைச் செய்தாலும் அதனை தான் செய்யவில்லை எனக்கூறி அதனை மற்றொருவர் மீது திணிக்க முயற்சி செய்வது தான் எந்த பணியையும் செய்யத் தகுதியற்ற கோழையின் மனநிலை. கல்வி சுகாதாரம் பற்றிய உலக வழிகாட்டல் ஒன்று தௌிவாக இருக்கும் போது ஐ.நா. சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலை பகிரங்கமாக புறக்கணிந்து முஸ்லிம் ஜனாஸாக்களை தீவைத்து எரித்துவிட்டு இப்போது அந்த மெத்திகா என்ற துவேசியின் மீீது குற்றம் சுமந்தும் இந்தக் கழுதைக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கிய அத்தனை 69 இலட்சம் கால கண்ணிகளின் கழுத்தில் கலப்பையைக் கட்டி வயலில் தள்ளிவிட வேண்டும் இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாக இருப்பினும் யாரும் இந்த அரக்கனின் குற்றத்தை ஒருபோதும் மன்னிப்பதில்லை. சவூதி அரேபியாவும் கதாரும் அதனைப் பல முறை செயலில் காட்டிவிட்டது
ReplyDelete