இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் குறிப்பிட்டுள்ள விடயங்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், அடிப்படை உரிமைகள், சட்டவாட்சி, ஜனநாயக ஆட்சி மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக Volker Türk தெரிவித்தார்.
நிகழ்நிலைக் காப்பு சட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு மற்றும் பதிவு தொடர்பான சட்டமூலம் என்பன இவற்றுள் உள்ளடங்கும் என அவர் கூறினார்.
இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இந்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் அக்கறை செலுத்தப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடி வருவதுடன், அவர்கள் அச்சுறுத்தல்கள், கைதுகள், வன்முறைகளையும் எதிர்கொள்வதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் காணிப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமையால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரப் பரவலாக்கத்திற்கான வழிமுறைகளாக உறுதியளிக்கபட்டிருந்தாலும் தற்போது அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சுமார் 5 வருடங்கள் ஆகின்ற போதிலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் உண்மை மற்றும் நீதியை தேடிக்கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவிற்கான சட்டவரைபொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், நம்பத்தகுந்த உண்மைகளை கண்டறிவதற்கான சூழல் இல்லை எனவும் அவர் கூறினார்.
Post a Comment