பஸால் நைஸர் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து வெற்றியுடன் ஓய்வு
- நெவில் அன்தனி -
பூட்டானுக்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பீபா சீரிஸ் 2024 கால்பந்தாட்டப் போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை ஈட்டிய வெற்றியுடன் சர்வதேச கால்பந்தாட்ட விளையாட்டிலிருந்து மொஹமத் பஸால் நைசர் ஓய்வு பெற்றார்.
இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி முடிவில் சக தேசிய வீரர்களால் குளிர்ச்சியான பிரியாவிடை வழங்கப்பட்ட முதலாவது வீரர் பஸால் நைஸர் ஆவார்.
பூட்டானுக்கு எதிரான போட்டியின் கடைசிக் கட்டத்தில் மாற்றுவீரராக பஸால் களம் நுழைந்தபோது இலங்கை அணியின் முழுநேர தலைவர் சுஜான் பெரேரா, பஸாலை கௌரவிக்கும் வகையில் அணித் தலைவருக்கான கைப்பட்டியை பஸாலுக்கு சூட்டினார். அப்போது அரங்கில் குழுமியிருந்த சுமார் 5,000 இரசிகர்கள் பஸாலின் பெயரை உரக்க உச்சரித்து தங்களது பாராட்டுதல்களை வெளிப்படுத்தி கௌரவித்தனர்.
பிரியாவிடை குறித்து அவரிடம் கேட்டபோது, ‘இலங்கையில் தேசிய கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு இத்தகைய பிரியாவிடை வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். எனது கால்பந்தாட்ட வாழ்க்கைக்கு இத்தகைய பிரியாவிடை கிடைக்க வேண்டும் என நான் கனவு கண்டு வந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் எனது கனவை நிறைவேறச் செய்ததற்காக அல்லாஹ்வுக்கே புகழ்’ என கண்ணீர மல்க கூறினார்.
இது ஆனந்த கண்ணீரா எனக் கேட்டபோது, ‘சக வீரர்களிடம் இருந்து விடைபெறுவது என்னை அழவைக்கிறது. இந்த பிரியாவிடையை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்’ என பதிலளித்தார்.
பாணந்துறை, அம்பலாந்துவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது கல்வியை ஆரம்பித்த பஸால் நைஸர், அங்குதான் கால்பந்தாட்ட வாழ்க்கையையும் ஆரம்பித்தார்.
அவரது வாப்பா நைஸர் தான் அவரது முதலாவது பயிற்றுநர் என அறியக்கிடைத்தது. அதன் பின்னர் சமத் மாஸ்டர், சம்பத் பெரேரா, எம்.எச். றூமி, மொஹமத் அமானுல்லா ஆகியோரும் அவருக்கு பயிற்சி அளித்தனர்.
‘எனது இரத்தத்தில் கால்பந்தாட்டத்தை ஊறச் செய்தவர் வேறு யாருமல்ல, எனது வாப்பா என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். அவர் எனக்கு வாப்பாவாக மட்டுமல்லாமல் குருவாகவும் பயிற்றுநராகவும் இருந்து என்னை கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக உயர்த்தினார்’ என பஸால் குறிப்பிட்டார்.
அம்பலாந்துவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 13 வயதுக்குட்பட்ட சம்பியன் அணியிலும் தொடர்ந்து அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் 14 வயதுக்குட்பட்ட சம்பியன் அணியிலும் சிறந்த கால்பந்தாட்ட நுட்பங்களுடன் முக்கிய வீரராக விளையாடிய பஸால் நைஸர் 2004ஆம் ஆண்டு மருதானை ஸாஹிரா கல்லூரியில் இணைந்தார்.
ஸாஹிரா கல்லூரியில் 15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்ட சம்பியன் அணிகளில் முன்கள வீரராக விளையாடிய பஸாலின் கால்பந்தாட்ட ஆற்றலைக் கண்டு பிரமிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அவர் பந்தைக் கட்டுப்படுத்தும் விதம், பந்து பரிமாற்றம் செய்யும் விதம், பந்தை நகர்த்திச்செல்லும் வேகம் என்பன பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும்.
பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டி ஒன்று சுகததாச அரங்கில் நடைபெற்றபோது ஸாஹிரா சார்பாக தனி ஒருவராக 9 கோல்களைப் போட்டு சாதனை படைத்தவர் பஸால். அவரது அந்த அரிய சாதனையை நேரடியாக பார்க்கும் பாக்கியம் இந்தக் கட்டுரையாளனுக்கு கிடைத்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஸாஹிரா கல்லூரி கால்பந்தாட்ட அணியில் பிரகாசித்த அவர் பின்னர் கழக மட்டப் போட்டிகளில் றினோன், கலம்போ எவ்.சி., புளூ ஸ்டார் போன்ற அணிகளிலும் சிறந்த முன்கள வீரராக மட்டுமல்ல மத்திய கள வீரராகவும் விளையாடி இருந்தார்.
தேசிய அணியில் 2008 இலிருந்து தொடர்ந்து 16 வருடங்களாக விளையாடிய பெருமை பஸாலை சாருகிறது.
இலங்கை அணியில் 2017இல் உதவித் தலைவராகவும் 2018, 2019, 2020களில் தலைவராகவும் விளையாடிய பஸால், சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 40 யார் தூரத்தில் இருந்து போட்ட கோலை தனது சிறந்த கோலாக வர்ணிக்கிறார்.
‘பங்களாதேஷுக்கு எதிராக பங்களாதேஷில் 2018 இல் அந் நாட்டின் 30,000 இரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் நான் போட்ட வெற்றிகோல் இன்றும் எனது கண்முன்னே வந்துகொண்டே இருக்கிறது. போட்டியின்போது எனக்கு பந்து கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் கோல்காப்பாளர் 18 யார் எல்லையில் இருப்பதை கவனித்தேன். உடனடியாக மின்னல் வேகத்தில் நான் பந்தை உயர்த்தி உதைத்து கோலினுள் புகச் செய்தேன். அதைத்தான் எனது வாழ்நாளில் சிறந்த கோலாக கருதுகிறேன்’ என நினைவுகூர்ந்தார்.
அந்தப் போட்டியை பங்களாதேஷில் தொழில்புரியும் மற்றும் உயர்கல்வி கற்கும் இலங்கையர்களில் 5000 பேர் கண்டு களித்ததாகவும் அறியக் கிடைத்தது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளி வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவது எந்தளவு பலன்தரும் எனக் கேட்டபோது,
‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இப்போதுதான் சரியான திசையில் செல்கிறது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளியினரை இணைத்துக்கொண்டு விளையாடுவதன் மூலம் சர்வதேச தரவரிசையில் இலங்கையினால் முன்னேற முடியும். அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் இலங்கையர்களே. அவர்களுடன் இணைந்து விளையாடும்போது இங்குள்ள வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைப்பதுடன் நிறைய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் வெகுவிரைவில் இலங்கை கால்பந்தாட்டம் உலக தரவரிசையில் முன்னேறும் என நம்புகிறேன்’ என்றார்.
சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து வெற்றியுடன் விடைபெற்ற பஸாலிடம் எதிர்கால குறிக்கோள் என்னவென கேட்டபோது,
‘இன்னும் சில வருடங்கள் கழக மட்டத்தில் விளையாட விரும்புகிறேன். அதன் மூலம் எனது அனுபவத்தை ஏனைய வீரர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களை சிறந்த வீரர்களாக உயர்த்துவேன்.
‘நான் பாணந்துறையில் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஒன்றை எனது வாப்பா, எனது இளைய சகோதரன் பாஹிர் நைஸர் ஆகியோருடன் இணைந்து நடத்துகிறேன். பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் பயிற்சிகளில் ஈடுபடும் சிறுவர்களை சிறந்த வீரர்களாக தரமுயர்த்துவதே எமது குறிக்கோளாகும். எமது பயிற்சியகத்தில் உருவாகும் சிறந்த வீரர்களை ஸாஹிரா, ஹமீத் அல் ஹுசெய்னி ஆகிய கல்லூரிகளில் இணைத்துவருகிறோம். அது எமக்கு மன ஆறுதலையும் திருப்தியையும் தருகிறது’ எனக் கூறினார்.
பஸாலுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா, ‘பஸாலின் மனதை குளிரவைக்கும் வகையில் பிரியாவிடை வழங்கவேண்டும் என நாங்கள் எண்ணினோம். அவர் எப்போது களம் புகுவார் என நான் எதிர்பார்த்த வண்ணம் இருந்தேன். அவர் களம் புகுந்ததும் எனது சிரேஷ்ட வீரரான அவரை கௌரவிக்கும் வகையிலேயே தலைவருக்கான கைப்பட்டியை அவருக்கு அணிவித்தேன். அவரைப் போன்ற சிறந்த, பண்புள்ள வீரருக்கு இந்த பிரியாவிடை உகந்ததாகும்’ என தெரிவித்தார்.- Vidivelli
Post a Comment