Header Ads



முஸ்லிம்களது, ரமழான் இதுதானா..? மாற்றுமதச் சகோதரர்கள் என்ன நினைக்கிறார்கள்..??


இது தான் இவர்களது உபவாசமா? ரமழான் பற்றிய மாற்றுமத மனப்பதிவுகள்..!


இன்று மாற்றுமதச் சகோதரர்கள் சிலர், ரமழான் ஆகையால் திடீரென  சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக பேசிக் கொண்டார்கள்.


"நோன்பு மாதத்தில் அவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களை செய்து சாப்பிடுவார்கள்" என ஒருவர் சொல்வதும் காதில் விழுந்தது.


பத்து வீத முஸ்லிம்கள் நாட்டில் 90% மக்களின் நுகர்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது கேள்வி தான்!


தட்டுப்பாடாக இருந்த கீரி சம்பா அதிகரித்த விலையில் சந்தைக்கு வந்திருக்கிறது, ஐந்து கிலோ ரூ 1300 விலையிடப்பட்டு ரூ 2000 ற்கு விற்கப்படுகிறது, வெங்காயம், கிழங்கு, பழ வகைகள் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.


வழமையை விட நோன்பு காலத்தில் ஓரளவு சிறப்பாக இப்தார் சஹர் உட்பட சிற்றுண்டிகள் பானங்கள் இனிப்பு பண்டங்கள் என செலவுகள் செய்வது உண்மைதான்.


அதே போன்று வசதி குறைந்தவர்கள் ஏழை எளியவர்களும் சிறப்பாக இஃப்தார் சஹர் செய்ய வேண்டும் என்பதற்காக உணவுப் பொருட்களை வாங்கி பொதிகள் செய்து விநியோகிப்பதாலும் சந்தையில் கேள்வி நிரம்பலில் தாக்கங்கள் ஏற்படுகின்றன.


அத்தோடு வழமையாகவே பெரும்பாலான முஸ்லிம்கள் மதுபான வகைகளுக்கு செலவளிக்காது ஆரோக்கியமான, சுவையான உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவதால் பண்டிகை காலங்களிலும் அதன் தாக்கத்தை காண முடிகிறது.


அண்மைக் காலமாக இஃப்தாருஸ் ஸாயிம் (ஏழை எளியவர்களை நோன்பு துறக்கச் செய்தல்) வசதி படைத்தவர்களின் அன்றாட பண்டிகைகளாக மாறி வருவதும் பிழையான மனப்பதிவுகளை மாற்று மதத்தவர்களிடம் ஏற்படுத்தி வருவதும் பகிரங்க இரகசியமாகும்.


ஒரு படி மேலே சென்று சமாதான சகவாழ்வு இஃப்தார் என மாற்று மத சகோதர சகோதரிகளையும் அழைத்து மண்டபங்களிலும் நக்ஷத்திர ஹோட்டல்களிலும் விதவிதமான சிற்றுண்டிகள் பழங்கள் பானங்கள் கஞ்சி பிரியானி என எமது விளம்பரப் பரோபகாரங்களை மேற் கொள்வதாலும்  முஸ்லிம்களது ரமழான் இது தானா ? என்ற மனப் பதிவை ஏற்படுத்துகிறோம்.


ஒரு காலத்தில் நோன்பு ஹஜ் பெருநாள் தினங்களில் வட்டலாப்பம் பிரியானி  கேட்டவர்கள் இப்போது தினமும் இப்தார் பண்டிகை பண்டங்கள் பானங்களை கேட்கும்  நிலை  வந்திருக்கிறது.


அத்தோடு எமது இஃப்தார் ஸஹர்  படங்களை சமூக ஊடகங்களில் தாராளமாக போட்டி போட்டுக் கொண்டு பதிவிடுகின்றோம்.


சிலர் ஹஜ் பெருநாள் என்றால் ஆடு மாடுகளுடன் சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் போடுவது போல் ரமழான் என்று வந்து விட்டால் இப்தார் சிற்றுண்டிகள் பானங்களுடன்  வாழ்த்துப் படங்களை பதிவிடுகிறார்கள்!


ஒரு வீட்டில் மாமிசம் சமைக்கும் வாடை அண்டை வீட்டற்கு வீசீனாலும் பகிர்ந்து உண்ண கற்றுத் தந்தது சன்மார்க்கம், ஆனால் அவற்றை படங்களாக பலரும் பார்க்க பகிரரும் எங்களது நடத்தைகள் சரிதானா என நாம் உணரத் தவறி விடுகிறோம்.


ரமழான் மாதம் நோன்பிருப்பதன் உண்மையான தாத்பரியத்தை நாம் உணர்ந்து எமது உணவுப் பழக்க வழக்கங்களில் நாம் பாரிய அளவில் மாற்றங்களை கடைப்பிடிக்க கடமைப் பட்டுள்ளோம்!


அத்தோடு இயன்றவரை மஸ்ஜிதுகளில் இடம் பெறும் ஆண்களுக்கு  மட்டுமான இப்தார்களையும் எளிமையாக செய்வதோடு மண்டபங்களில், ஹோட்டல்களில் ஆடம்பரமாக இடம் பெறும் இஃப்தார் விருந்துகளையும் நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.


அவ்வாறு விரயமாக்கப்படும் பணத்தை ஏழை எளியவர்கள் குடும்பமாக இஃப்தார் சஹர் இரண்டையும்  செய்வதற்கான ஏற்பாடுகளில் செலவு செய்தல் வேண்டும்!


பலஸ்தீன் காஸா மக்களது நிலை எண்ணியாவது இந்த ரமழானை நோன்பின் மாண்புகள் பேணி சிக்கனமாக எளிமையாக கையாள முயற்சிப்போமா?


உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் பலஸ்தீன காஸா மக்களை, எம்மை எமது பெற்றார் உடன்பிறப்புகள் மனைவிமக்கள் உற்றார் உறவினர் ஆசான்கள், அன்பிற்குரியோர், அறப்பனிகள் புரிவோரையும் மறவாதீர்கள்!


-மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்-


No comments

Powered by Blogger.