"ஜனாஸாக்களின் புகைப்படங்கள் கொடூரமாக பிரசுரிக்கப்பட்டமை மிகவும் கவலைக்குரியதாகும்"
- ஏ.எல்.எம்.ஷினாஸ் -
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கலீல் முஹம்மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 18) ஆகிய விசேட தேவையுடைய இரு பிள்ளைகளும் கடந்த (14) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தாம் வசித்துவந்த வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்த பிரதேசம் எங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஜனாஸா நல்லடக்கம்
குறித்த இந்த சம்பவத்தை கேள்வியுற்று வெளிநாட்டில் பணிபுரிந்த இரு சகோதரர்களும் உடனடியாக நாட்டுக்கு திரும்பியதையடுத்து, மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நல்லடக்கத்தின் பின்னர் கூடியிருந்த மக்கள் மத்தியில் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் (மதனி) ஜனாஸா உரையை நிகழ்த்தினார். ‘நடக்கக்கூடாத சம்பவம் இந்த மண்ணில் நடந்தேறியிருப்பது எல்லோருக்கும் கவலை தருகிறது.
இச்சம்பவமானது புரியாத புதிராக உள்ள நிலையில், சமூகத்தின் பல தரப்பினர் பக்கமும் விரல் நீட்டுவதை தவிர்த்து, பாவங்கள் மன்னிக்கப்பட்ட உளநலம் குன்றிய பிள்ளைகளுக்காக பிராத்திப்போம். இறையச்சம், இஸ்லாமிய செல் நெறிகள் மீறப்படும் போது உள்ளங்கள் எவ்வாறு துருப்பிடிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும். சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் ஜனாஸாக்களின் புகைப்படங்கள் கொடூரமான வகையில் பிரசுரிக்கப்பட்டமை மிகவும் கவலைக்குரியதாகும். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். –
Vidivelli
Post a Comment