Header Ads



சந்திப்பில் என்ன நடந்தது..?


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று  நேற்று (07) நடைபெற்றுள்ளது.


எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல், இந்த சந்திப்பு நிறைவடைந்ததாக Daily Mirror பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 


இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தரப்பில் சாகல ரத்நாயக்கவும் பங்கேற்றுள்ளார்.


தமது கட்சியின் கொள்கைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் அதிகாரியொருவர் கூறினார். 


ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆணைக்கு அமையவே  ஜனாதிபதியாக செயற்படுவதாகவும் ,  நாட்டை  பிரிப்பதற்கு உடன்படாமல் ஒற்றுமையை பாதுகாத்தல், தேசிய வளங்களை பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே குறித்த ஆணை மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். 


இந்த விடயங்களுக்கு உடன்படாத எந்த விடயங்களுக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினர்  இதன்போது வலியுறுத்தியுள்ளனர். 


தற்போதைய நிலைமையினை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்மானங்களுக்கு அமைய தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயரதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டுக்கு கூறினார். 


சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படும் போது, அரச தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் பசில் ராஜபக்‌ஸவும் கூறியுள்ளனர். 


எவ்வாறாயினும், தேர்தல் செயற்பாடுகள் அல்லது கூட்டணி அமைப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவில்லை என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் அதிகாரியொருவர் கூறினார். 


எதிர்காலத்திலும் தமது கட்சியின் செயற்பாடுகளை வெவ்வேறாக முன்னெடுப்பதற்கு இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.


No comments

Powered by Blogger.