Header Ads



மைத்திரியை என்ன செய்யப் போகிறார்கள்..?


ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய முடியாதென சட்டத்துறை சார்ந்தோர் தெரிவித்துள்ள அதேவேளை, அரசியல் இலாபம் கருதியே அவர் இவ்வாறு செயற்படுவதாக கொழும்பு பேராயர் இல்லம் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.


ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 23 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.


கண்டியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.


நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டால் அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக அவரை கைது செய்யுமாறு அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பல்வேறு தரப்புகளினாலும் வலியுறுத்தப்பட்டது.


இவ்வாறான பின்னணியில் மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் காவல்துறைமா அதிபருக்கு கடந்த சனிக்கிழமை பணிப்புரை விடுத்திருந்தார்.


அதற்கமைய, சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  ஐந்தரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டது. 


ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் அண்மித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன.


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.