Header Ads



பசில் - ரணில் நேற்றிரவு மீண்டும் சந்திப்பு


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தல், நடைபெறவுள்ள ஏனைய தேர்தல்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னரே இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.


இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாததால், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மத்தியில் இருதரப்பு கருத்துக்கள் நிலவுவதால் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் மீண்டும் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் அனைவரும் ஒரே கருத்தை முன்வைக்க முடியும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.