கோட்டாபயவின் புத்தகம் - அவதானம் செலுத்தி வருவதாக ரஷ்யா தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புத்தகம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வெளிநாட்டுத் தூதுவர்களின் வருகைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்து எந்தெந்த நாடுகளின் இராஜதந்திரிகளை குறிப்பிடுகிறது எனவும் ரஷ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி’ என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருந்தார் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகுமாறு கொழும்பில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றதுடன், சிங்கப்பூரில் இருந்து தமது பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பியிருந்தார். தற்சமயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள புத்தகத்தில் தம்மை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சர்வதேச சதியொன்று முன்னெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
குறித்த புத்தகத்தில் அடங்கியுள்ள பல விடயங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் அவதானத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment