சூரியன் மறையாத பகுதியில், எப்படி நோன்பு பிடிக்கிறார்கள்..? பள்ளிவாசலின் நிலை என்ன..??
- Rosy S Nasrath -
கனடா எனும் நாடு அமைந்திருக்கும் நிலப்பரப்பு மேலோட்டமாக வட அமேரிக்கக் கண்டமாக இருந்தாலும், அது வடதுருவப் பகுதி எனப்படும் ஆர்க்டிக் சர்க்கிளுக்குள் வரும் ஒரு பனிபடர்ந்த நாடாகும். இங்கு இனுவிக் எனும் நகரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பள்ளிவாசல் தான் இந்த மிட்நைட் சன் பள்ளிவாசல். இந்த பள்ளிவாசல் நிர்வாகப்பொறுத்தவரை இவர்கள் தங்களை சுன்னி-சூஃபி என்ற பிரிவுகளுக்கு கீழோ அல்லது ஹனபி - ஹம்பளி என்ற இமாம்களுக்கு கீழோ இருந்து இயங்குவதாக அடையாளப்படுத்திக்கொள்ளாத ஒரு தவ்ஹீத் பள்ளிவாசலாக இயங்கி வருகிறது.
ஒட்டுமொத்த ஆர்க்டிக் துருவ வளையத்திலும் முஸ்லிம்கள் பிரார்த்திப்பதற்காக கட்டப்பட்ட ஒரேயொரு பள்ளிவாசல் எனில் அது இது ஒன்று தான். 1960இல் கனடாவின் இனுவிக் நகருக்கு வந்தவர் லெபனான் முஸ்லிமான அஹ்மத் அலி எனும் பீட்டர் பேக்கர். இவர் அங்கு வந்து ஒரு எண்ணெய் தொழிற்சாலையை நிறுவிய கையோடு கனடா நாட்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே முஸ்லிம் என அறியப்பட்ட அவரது ஆதரவில் 1970வாக்கில் அங்கு நிறைய முஸ்லிம்கள் குடியேற ஆரம்பித்தனர். எண்ணெய் வளம் நிறைந்த அந்த பகுதிக்குள் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகளும் நிறைய கிடைக்கத்தொடங்கியது.
2000வது ஆண்டின் கணக்குப்படி இனுவிக் நகரத்தில் சுமார் நூறு முஸ்லிம்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது, அவர்களில் அனைவரும் எகிப்து,லெபனான் மற்றும் சுடான் நாட்டுக்காரர்களாக இருந்தனர். இவர்கள் அங்கு கட்டிடத் தொழிலாளர்களாக,வாகன சாரதிகளாக, பொறியாளர்களாக மற்றும் தொழிலதிபர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் தொழுவதற்கு இடமில்லாதிருந்த நிலையில் இருபது பேர் நின்று தொழக்கூடிய வகையிலான ஒரு டிரக் ஒன்றை எடுத்து அதில் நின்று தான் தொழுது வந்தனர். அதன்பிறகு வெள்ளி ஜும்மா தொழுகைகளுக்கு அங்குள்ள , லேடி ஆஃப் விக்டரி கத்தோலிக்க தேவாலயத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்கித்தரப்பட்டது.
பிறகு 2008இல் இங்கு வருகைபுரிந்த எகிப்து இமாம் ஒருவருடைய ஆலோசனையின் பெயரில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து சுபைதா பவுண்டேஷன் என்ற அமைப்பினைத் தொடங்கி அதன்வழியாக அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் பணம் வசூலித்து இனுவிக் நகரில் இடம் வாங்கி இந்த பள்ளிவாசல் கட்டும் பணி 2010இல் தொடங்கப்பட்டது.
சூரியன் எப்போதும் மறையாத வடதுருவப்பகுதி என்பதால் இங்கு ரமதான் மாத சஹரும் இஃப்தாரும் இதர தொழுகைகளும் சவூதியின் மக்காவின் வக்து தொழுகைகளை பின்பற்றி நிறைவேற்றப்படுகிறது. நூறு பேர் மாத்திரமே தொழக்கூடிய அளவில் 1,554 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலில் துருக்கிய உதுமானிய கட்டடக்கலை மினாராவும் நூலகமும் ,இலவச உணவு வங்கியும் செயல்படுகிறது.
சூரியன் மறையாத இனுவிக் நகரில் பக்ரீத் பெருநாளுக்காக ஆடு,மாடு,மான் ஆகியவற்றின் இறைச்சிகள் வெட்டப்பட்டு அங்குள்ள முஸ்லிம், கிறுஸ்தவர் என அனைவருக்கும் பகிர்ந்தளித்து கொடுக்கப்படுகிறது. அதுபோல ஒவ்வொரு ரமதானுக்கும் அங்குள்ள கிறுஸ்தவர்களால் இப்தாருக்கான செலவுகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ளப்படுவது சூரியன் அஸ்த்தமிக்காத நகரமாக மாத்திரமல்லாது மத நல்லிணக்கமும் அந்தரிக்காத நகரமாகவும் திகழ்கிறது.
Post a Comment