தண்டனைக்குரிய குற்றம் செய்துள்ள, மைத்திரியை பிடித்து சிறையில் அடைப்பார்களா..?
- எப்.அய்னா -
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும், அதன் விளைவுகளால் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்தவர்களும் நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான கேள்வி 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை தொடர்கிறது. இதற்கான விடையை இதுவரை விசாரணையாளர்களும் வழங்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் தான், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடக்கும் போது, நாட்டின் ஜனாதிபதியாக, முப்படைகளின் பிரதானியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, பிரதான சூத்திரதாரி யார் என தனக்கு தெரியும் என வெளிப்படுத்தியுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி கண்டியில் வைத்து மைத்திரிபால சிறிசேன இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் எங்கிருந்து நடாத்தப்பட்டது என்பது எங்களுக்கும் தெரியும். வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், அது சரி…. நான் கைது செய்தவர்களே இப்போது மூவர் கொண்ட நீதிபதிகளால் விசாரிக்கப்படுகிறார்கள். மறுபுறம், உண்மையில் யார் இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை முன்னெடுத்தார்கள் என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஆனால் அதை செய்தது யார் என்று எனக்கு தெரியும். இதுபற்றி சாட்சியம் அளிக்கும்படி நீதிமன்றம் என்னிடம் ஏதேனும் கோரிக்கையோ அல்லது உத்தரவையோ விடுத்தால், இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்று கூற நான் தயார். மற்ற விஷயம் என்னவென்றால், அதை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது அந்த நீதிபதிகளின் பொறுப்பு.’ என இதன்போது மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
சி.ஐ.டி. விசாரணை :
மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்தை அடுத்து, முழு நாட்டிலும் அது பேசு பொருளானது. மைத்திரியின் கருத்து தேர்தல் காலம் நெருங்குவதால் அதனை இலக்காக கொண்டதாக இருக்கலாம் என ஒரு சாராரும், மைத்திரியை கைது செய்ய வேண்டும் என இன்னொரு சாராரும், மைத்திரி தனக்கு தெரிந்தவற்றை வெளிப்படையாக கூற வேண்டும் என மற்றொரு சாராரும் தெரிவித்தனர். பலர் மைத்திரிக்கு எதிராக சி.ஐ.டி.யில் முறைப்பாடும் செய்தனர்.
இவ்வாறான நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விடுத்த உத்தரவுக்கு அமைய சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது. சி.ஐ.டி. பணிப்பாளர் மங்கள தெஹிதெனியவின் நேரடி மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து கடந்த 25 ஆம் திகதி மைத்திரியிடம் சுமார் 6 மணி நேர வாக்கு மூலம் ஒன்றினையும் பதிந்துள்ளது.
அந்த வாக்கு மூலமானது தற்போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரங்களை கையாளும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
தண்டனைக்குரிய குற்றம்:
மைத்திரிபால சிறிசேன கடந்த 25 ஆம் திகதி கண்டியில் வைத்து, தனக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை தெரியும் என அறிவித்ததை தொடர்ந்து முன் வைக்கப்பட்ட பிரதான விடயம், இதுவரை அந்த தகவல்களை மறைத்தமைக்காக அவர் கைது செய்யப்படல் வேண்டும் என்பதாகும்.
ஆணைக் குழு, உயர் நீதிமன்றில்
ஏன் தெரிவிக்கவில்லை?
மைத்திரிபால சிறிசேன, பிரதான சுத்திரதாரி தொடர்பில் தகவல் அறிந்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், அல்லது அவருக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு செலுத்த உத்தரவிடப்பட்ட உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைகளின் போது ஏன் அவர் அதனை கூறவில்லை என கத்தோலிக்க தரப்பு உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும இலங்கை சட்டத்தின்படி, குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை மறைப்பது குற்றமாகும் என தெரிவித்தார்.
“குற்றச் செயல் தொடர்பில் தகவல்களை அறிந்தும் அதனை மறைப்பது குற்றம். தண்டனைச் சட்டக் கோவை மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்படி இது குற்றமாகும். இலங்கையில் தற்போதுள்ள சட்டத்தின்படி தகவல்களை மறைக்க முடியாது. இது தேங்காய் திருட்டு போன்ற சிறிய பிரச்சினை அல்ல. நாடு எதிர்கொண்ட ஒரு பெரிய சோகத்தின் முதல் வழக்கு. முதல் குடிமகனாக செயல்பட்ட ஜனாதிபதியின் கருத்து இது. எனவே, இந்த தீவிரமான தகவலை அவர் மறைத்திருந்தால், அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.” என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.
3 வாரங்களுக்கு முன்னரே தெரியும் :
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் சூத்திரதாரி குறித்து 3 வாரங்களுக்கு முன்னரேயே தான் அறிந்த்துகொண்டதாகவும் , அதனை வெளிப்படையாக கூறினால் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் என மைத்திரிபால சிறிசேன கடந்த 23 ஆம் திகதி, தான் கண்டியில் தெரிவித்த கருத்துக்களுக்கு மேலதிக விளக்கமளித்திருந்தார்.
பொய் கூறுவதும் குற்றம் :
இதேவேளை, பொய்யான ஆதாரங்கள் அல்லது பொய்யான தகவல்களை முன்வைப்பதும் பாரிய குற்றமாகும் என சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்துள்ளார்.
“ஒரு குற்றம் தொடர்பில் பொய்ச் சாட்சியம் கூறுவது அந்தக் குற்றத்தின் தன்மைக்கு அமைய தண்டனையை பெற்றுக்கொடுக்க வல்ல குற்றமாகும். மரண தண்டனைக்குரிய குற்றம் தொடர்பில் பொய்ச் சாட்சியம் கூறுவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்” என சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்தார்.
3 வாரங்களாக தகவலை மறைத்தது ஏன்?
மைத்திரிபால சிறிசேனவின் விளக்கம் பிரகாரம், பிரதான சூத்திரதாரி தொடர்பில் அவர் 3 வாரங்கள் தகவல்களை மறைத்து வைத்திருந்துள்ளார். இதுவே அவரை கைது செய்ய போதுமானது என சில சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பை மையப்படுத்தி கல்முனை மேல் நீதிமன்றில், சஹ்ரானின் மனைவி ஹாதியாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பத்திரிகையை ஆராயும் போது, பொலிஸாருக்கு அவர் தகவல்களை அளிக்க தவறியதாக கூறப்படும் காலப்பகுதி வெறுமனே ஒரு வார காலமாகும்.
எனவே மைத்திரிக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய பின் நிற்கக் கூடாது என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அரசியல் பின்னணியா?
எவ்வாறாயினும் மைத்திரியின் கருத்தின் பின்னணியில் ஏதேனும் அரசியல் காய் நகர்த்தல்கள் நோக்காக உள்ளதா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
குறிப்பாக வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலொன்று உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது. காரணம், தேர்தலொன்று நெருங்கும் போது மைத்திரிபால சிறிசேன இத்தகைய வெளிப்படுத்தலை முன் வைத்துள்ளமையாகும்.
அமெரிக்க தூதுவரின் இரகசிய சந்திப்பு :
மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது, இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் மைத்திரிபால சிறிசேன தலைவராக செயற்படும் சுதந்திர கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கும் இடையே கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுமார் ஒரு மணி நேர இரகசிய சந்திப்பொன்று நடந்துள்ளது. இந்த சந்திப்பு சில சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
எனினும் சஜின் வாஸ் தரப்பு இச்சந்திப்பை உறுதி செய்த போதும், அது தனிப்பட்ட நட்பு ரீதியிலான சந்திப்பு என விளக்கமளித்துள்ளது.
விரிவான விசாரணை அவசியம், மைத்திரிக்கு பாதுகாப்பும் வேண்டும் :
எது எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தின் படி, அவருக்கு உண்மையிலேயே சூத்திரதாரி யார் என தெரிந்திருந்தால், அவரது வாக்கு மூலத்துக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படல் வேண்டும். அவர் உண்மையிலேயே தகவல்களை அறிந்திருப்பாரானால், அதற்காக அவரது பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் மைத்திரி கூறுவது உண்மை எனில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிக்கு, தன்னை காட்டிக் கொடுக்கும் மைத்திரியின் உயிரை பறிக்க அவ்வளவு நேரம் எடுக்காது. – Vidivelli
Post a Comment