ஹஜ் யாத்திரைக்கு சவாலா..? உயர் நீதிமன்றம் செல்லப்போகும் விவகாரம்
-ஏ.ஆர்.ஏ.பரீல்-
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தின் ஹஜ் வழிகாட்டல்கள் அரச ஹஜ் குழுவினாலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளுக்கு குறிப்பிட்ட காரணங்களை முன்வைத்து தடையுத்தரவு பிறப்பிக்கும்படியும் (Stay Order) மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கினை யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் (United Travels & Holidays (PVT) LTD) எனும் ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் மொஹமட் லரீப் தாக்கல் செய்யவுள்ளார். பிரதிவாதிகளாக அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹிம் அன்ஸார் உட்பட ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட். ஏ.எம். பைஸல், ஹஜ் விசாரணைக் குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்படவுள்ளனர்.
இவ்வருடம் 3500 ஹஜ் கோட்டா சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த 3500 ஹஜ் கோட்டா 93 ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 93 ஹஜ் முகவர்களும் நேர்முகப் பரீட்சையொன்றின் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹஜ்குழு தலைவருக்கு,ம் ஹஜ் முகவருக்குமிடையில் வாய்த்தர்க்கம்
கடந்த வருடம் (2023) ஹஜ் யாத்திரிகர்களை ஹஜ் கடமைக்கு அழைத்துச் சென்ற ஹஜ் முகவர் நிலையங்களில் ஒன்றான யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து அந்நிறுவனத்துக்கு ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழு 2 வருடஙகள் தற்காலிக தடை விதித்தது. ஹஜ் முறைப்பாடு விசாரணை குழுவினால் விதிக்கப்பட்ட இத் தண்டனைக்கெதிராக குறிப்பிட்ட முகவர் நிலைய உரிமையாளர் முஹம்மட் லரீப் மேன்முறையீடு (Appeal) செய்திருந்தார்.
குறிப்பிட்ட மேன்முறையீடு தொடர்பில் பல வாரங்களாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் மொஹமட் லரீப் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹிம் அன்ஸாரை சந்திக்க கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி கொழும்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இயங்கி வரும் அரச ஹஜ் குழுவின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் முஹம்மட் லரீப் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், ‘நான் அரச ஹஜ் குழுவின் தலைவரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்று எனது மேன்முறையீடு தொடர்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும் என்றேன். அவர் அதற்கு இடமளிக்கவில்லை. நீங்கள் வெளியே செல்லுங்கள் இங்கு வரவேண்டாம் என உத்தரவிட்டார். மேன்முறையீடு தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதற்கான கடிதத்தை தாருங்கள் என்றேன். முடியாது வெளியே போ’ என்றார். இதனையடுத்து எங்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நான் அவரை ஏசிவிட்டேன் என்றார்.
முரண்பாடுகளுக்குக் காரணம்
மொஹமட் லரீப் முரண்பாடுகளுக்கான காரணங்களை விளக்கினார். ‘இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டபோது முகவர் நியமனம் பெறுவதாயின் நேர்முகப் பரீட்சையில் 50க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற வேண்டுமெனக் கூறப்பட்டது. ஆனால் நேர்முகப் பரீட்சையில் எனது ஹஜ் முகவர் நிறுவனம் 68 புள்ளிகளைப் பெற்றது.
2023ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் எனது முகவர் நிலையத்துக்கு எதிராக 2 முறைப்பாடுகள் ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றின் ஹஜ் வழிகாட்டல்களின் படி ஹஜ் முகவர் நியமன நேர்முகப் பரீட்சைக்கு முன்பே முறைப்பாடு தொடர்பான விசாரணை நடாத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டதன் பின்பே முறைப்பாடு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. முறைப்பாடுகள் ஹஜ் யாத்திரை நிறைவுற்று 3 மாத காலத்துக்குள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 5 மாதங்களின் பின்பே விசாரணைகள் நடாத்தப்பட்டன. விசாரணையின் பின்பு ஹஜ் தொடர்பான முறைப்பாட்டுக்கு 2 இலட்சம் ரூபாவும், உம்ரா பிரச்சினை தொடர்பான முறைப்பாட்டுக்கு 3 இலட்சம் ரூபாவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. நான் அவ்வாறே குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்தினேன்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி எனது ஹஜ் நிறுவனத்துக்கு 2 வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக வாய்மூலம் தெரிவிக்கப்பட்டது. இத்தடை உத்தரவை ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழுவே அறிவித்திருந்தது.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக நான் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி அரச ஹஜ் கமிட்டிக்கும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் மேன்முறையீடு செய்தேன். 2024 ஜனவரி 2ஆம் திகதி அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் முறையீடு செய்தேன்.
தொடர்ந்து எனது நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட தடையுத்தரவு (டிசம்பர் 29) தொடர்பாக எழுத்து மூலம் கோரியதற்கு இணங்க 2024 ஜனவரி 17ஆம் திகதி கடிதம் தரப்பட்டது. இதனையடுத்து எனது சட்டத்தரணி தொடர்பு கொண்டு பேசியதையடுத்து மீண்டும் என்னிடம் மேன்முறையீடு தொடர்பான கடிதம் கோரப்பட்டது. அதனையும் கொடுத்தேன். எனது மேன்முறையீட்டினை ஹஜ் முறைப்பாடு விசாரணைக்கு குழுவுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள்.
பிறகு கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு என்னை அழைத்தது. நான் சட்டத்தரணியுடன் சென்றேன். இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்ற ஹஜ் வழிகாட்டல்களின்படி அரச ஹஜ் குழுவுக்கே அதிகாரமுள்ளது என விசாரணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்த அறிவுறுத்தலை அடுத்து மீண்டும் அரச ஹஜ் குழுவின் தலைவருக்கு கடிதம் கொடுத்தேன். எனது மேன்முறையீடு தொடர்பில் எனக்கு எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லை. எவ்வித தீர்வும் கிட்டவில்லை. அமைச்சர் மற்றும் அரச ஹஜ் குழுவுக்கு எனது நிறுவனத்துக்கு ஹஜ் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் நான் ஹஜ் குழு உறுப்பினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். இவ்விவகாரம் ஹஜ் குழு உறுப்பினர்களுக்கு தெரியாது. ஹஜ் குழு கூட்டம் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.
இதனையடுத்தே கடந்த பெப்ரவரி மாதம் அரச ஹஜ் குழுத் தலைவரைச் சந்திக்க அவரது அலுவலகம் சென்றேன். அவர் என்னை அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றினார். அப்போதே முரண்பாடு ஏற்பட்டு எங்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நானும் ஹஜ் குழுத் தலைவரை ஏசினேன் என்றார்.
மார்ச் 1ஆம் திகதியே கடிதம் கிடைத்தது
இவ்வருடம் ஹஜ் முகவராக நான் நியமிக்கப்படாமை தொடர்பிலான எனது மேன்முறையீட்டு மனுவை கவனத்திற் கொள்ள முடியாது என எனக்கு மார்ச் மாதம் 1ஆம் திகதியே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ கடிதம் கிடைக்கப்பெற்றது.
ஆனால் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்களின் படி எனது மேன்முறையீட்டு மனுவினை விசாரித்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை ஹஜ் கோட்டா பிரித்து வழங்கப்பட முடியாது. அத்தோடு எனது மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைக்கு அரச ஹஜ் குழு எனக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. எனது மேன்முறையீட்டு மனுவினை தீர்வு பெற்றுத்தராது வேண்டுமென்றே கால தாமதப்படுத்தியமைக்கு அரச ஹஜ் குழுவின் தலைவரே பொறுப்புக் கூற வேண்டும். இக்காரணங்களை முன்வைத்தே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஏன் ஹஜ் அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டது
கடந்த வருடம் 2023இல் எனது ஹஜ் நிறுவனத்துக்கு 25 ஹஜ் கோட்டா ஒதுக்கப்பட்டது. எனது நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 25 ஹஜ் கோட்டாவில் 10 கோட்டாவை ஹஜ் குழுவின் தலைவர் எனக்குத் தெரியாமலே வேறு இரு ஹஜ் முகவர்களுக்கு தலா 5 கோட்டா வீதம் வழங்கியிருந்தார். இறுதிவரை அவர் இதுபற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை. எனவே இது தொடர்பில் ஹஜ் குழுவின் தலைவருக்கு எதிராக நானும் ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்திருந்தேன். அவர் விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டார். இதன் காரணமாகவே என்னைப் பழிவாங்கும் நோக்கோடு 2 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மொஹமட் லரீப் தெரிவித்தார்.
விசாரணையின் பின்பே தடையுத்தரவு
2023 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் சென்ற முகவர்கள் சிலர் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இம்முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற நீதிவான் ஒருவரின் தலைமையிலான மூவர் கொண்ட விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டன. குறிப்பிட்ட ஹஜ் முகவர் நிறுவனத்துக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனையடுத்தே அந்நிறுவனத்துக்கு 2 வருட தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
மொஹமட் லரீப் உட்பட மூன்று ஹஜ் முகவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொஹமட் லரீபின் ஹஜ் நிறுவனத்துக்கு 2 வருட கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஒரு ஹஜ் முகவரின் கோட்டாவை 50 வீதத்தாலும், மற்றைய முகவரின் கோட்டாவை 25 வீதத்தாலும் குறைக்கும் படி ஹஜ் முறைப்பாடு விசாரணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பே நிறைவேற்றப்பட்டது. இத்தீர்ப்பு தொடர்பில் முகவர் மொஹமட் லரீபுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் கடந்த முதலாம் திகதி அறிவிக்கப்பட்டது. அவரது மேன்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
முகவர் முஹம்மட் லரீப்
எனது மேன்முறையீடு தொடர்பில் காலம் கடந்து மார்ச் 1ஆம் திகதியே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனது முகவர் நிறுவனம் கடந்த 8 வருடங்களாக இயங்கி வருகிறது. உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய ஹஜ் வழிகாட்டல்களின்படி புதிய முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் முதலில் அவர் எச்சரிக்கப்பட வேண்டும். இரண்டாவது தடவையும் முறைப்பாடு கிடைத்தால் இடைக்கால தடை விதிக்கப்படலாம். 8 வருட எனது சேவையில் இந்த முறையே எனக்கெதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன என்றார்.
நீதிமன்றின் ஹஜ் வழிகாட்டல் சரியாக பின்பற்றப்பட வேண்டும்
ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அவ்வழிகாட்டல்கள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன. ஹஜ் வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் ஹஜ் விவகாரத்தில் இவ்வாறான சர்ச்சைகள் தோன்றுவதற்கு வாய்ப்பிருக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஹஜ் குழு என்பன இது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும். – Vidivelli
Post a Comment