காத்தான்குடியில் கைதான 30 பேரும் பிணையில் விடுதலை
- ஜவ்பர்கான் -
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று அதிகாலை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திர வாரியான சஹ்ரான் குழு உறுப்பினர்கள் என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 4 பேர் உட்பட கைது செய்யப்பட்ட 30 பேரும் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட போது அனைவரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.
பொலீசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று அதிகாலை உரிய இடத்துக்கு சென்ற பொலீசார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலீசார் மேலும் குறிப்பிட்டனர்
கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தகர்கள் இளைஞர்கள் அடங்குவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான நபரான ஸஹ்றான் காசீமுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நாலு பேர் அடங்குவதாகவும் பொலீசார் தெரிவித்தனர்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள் ஒவ்வொரு வாரமும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாயல் வீதியிலுள்ள வளவு ஒன்றினுள் வெள்ளிக்கிழமை இரவில் ஒன்று கூடி பொழுது போக்குக்குக்காக 304 விளையாடி வருவது வழக்கமாகும்.
இந்த வகையில் ஒன்று கூடி 304 விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் தெரிய வருகின்றது.
இது தொடர்பாக பொலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment