Header Ads



மறக்கப்பட முடியாத மானிட நேயன் அரசாங்க அதிபர் MM. மக்பூல்


- கலாபூஷணம் யாழ் அஸீம் -   


“நண்பர் மக்பூலுடன் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது இரண்டு பண்புகள் பளிச்சென தெரியவரும். ஒன்று:- அவருக்கு அடிநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களது சுக துக்கங்கள், பிரச்சனைகள் ஆகியன நன்கு தெரிந்திருந்தது. அம் மக்களது பிரச்சனைகளை அவர் உணர்வு பூர்வமாக விளங்கிக் கொண்டிருந்தார். இரண்டு:- தான் எதிர் நோக்கம் எந்தப் பிரச்சினையையும் புலமை நிலைப்பட பார்க்கும் திறன் அவரிடம் இருந்தது.. முதலாவது அவரது சொந்த வாழ்க்கையின் அனுபவத்தின் வழியாக வந்தது. இரண்டாவது அவரது கல்வித்திறனால் அவருக்கு கிட்டியது.” மறைந்த அரசாங்க அதிபர் எம்.எம்.மக்பூல் அவர்களைப் பற்றி உலகறிந்த அறிஞர் மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறிய வாசகங்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவையாகும்.


மனிதர்கள் இம் மண்ணில் வாழ்கின்றனர்... மடிகின்றனர்.. ஆனாலும் எல்லோரும் எக்காலத்திலும் மனதில் நிலைத்து நிற்பதில்லை. உயர்ந்த பண்புகளாலும், உன்னதமான சேவைக ளாலும் என்றும் எம் மனதில் நிலைத்து வாழ்பவர்களுள் மன்னாரின் முன்னாள் அரசாங்க அதிபர் மர்ஹூம் எம்.எம். மக்பூல் அவர்களும் ஒருவர். கடமையை அவர் உயிரிலும் மேலாகக் கருதி னார். கடமை அழைத்த போதெல்லாம் நேரம் பாராது அவ்விடத்துக்குச் சென்று இடர் களைவதில் வல்லவர். அவ்வாறுதான் அன்றும் 1988 ஜனவரி 22இல் அவரை அழைத்துச் சென்றனர். இரக்க சிந்தையுடன் கடமையாற்றிய அந்தப் பெருமகனை அழைத்துச் சென்றவர்கள், இரக்கமின்றித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். யாழ் மண்ணின் மைந்தனாம் மக்பூல், இலங்கை முஸ்லிம் சமூகத்தைத் துயரத்திலாழ்த்திவிட்டு மன்னார் மண்ணிலேயே தியாகியானார்.


முஸ்லிம் சமூகத்தின் நிர்வாகப் பதவியிலிருப்போரை, முஸ்லிம் புத்திஜீவிகளை அழிக்கும் திட்டத்தில் முதலில் கொல்லப்பட்டவர் இவரே. இவரைத் தொடர்ந்து உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய உதுமான், மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முஹம்மது, மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் வை.அஹமது, குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் இப்ராஹிம், இறுதியாக காத்தான்குடி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நற்பிட்டிமுனை பளீல் ஆகியோர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். முஸ்லிம் சமூகத்தில் வீழ்த்தப்பட்ட இந்த முத்துக்களை, அவர்கள் பணிகளை நாம் என்றும் மறந்து விட முடியாது. உயர் குணம் படைத்த உத்தமராம் எம். எம். மக்பூல், மறைந்து 35 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.


யாழ் மண்ணிலே மீரான் முகிதீன்-செய்தூன் தம்பதியினரின் மூத்த புதல்வராக ஒரு சாதாரண குடும்பத்தில் 20.04.1942 அன்று மக்பூல் பிறந்தார். அவரது இளமைக் கல்வியை யாழ்/ வைத்தீஸ் வரா வித்தியாலயத்தில் மேற்கொண்டு, அங்கிருந்து 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு பட்டப்படிப்பு மேற்கொள்ளச் சென்றார். இறுதிப் பரீட்சையில் மிக சிறப்பாகச் சித்தியடைந்து. 1963இல் பட்டதாரியாக வெளியேறிய இவர் முதலில் கண்டி கலகெதர முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையை ஆரம்பித்தார். கற்பித்துக் கொண்டே அரச நிர்வாகப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார். பின்னர் இலங்கை வங்கியின் பதவிநிலை உத்தியோகத்தராகச் சொற்பகாலம் கடமையாற்றினார். 1967 இல் இலங்கை நிர்வாக சேவைக்குப் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவானார். அதனைத் தொடர்ந்து சம்மாந்துறையில் பிரிவுக் காரியதிகாரியாகக் கடமையேற்று அங்கு மூன்று வருடங்கள் வரை கடமையாற்றினார். பின்னர் கிளிநொச்சிக்கு காணி அதிகாரியாக மாற்றம் பெற்று அங்கு தமிழ் மக்களது பாராட்டுக்குரியவராக எட்டு வருடங்கள் கடமையாற்றினார்.


இவர் காணிப் பரிபாலனத்தில் பெற்ற நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றால் பிரதிக்காணி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று கொழும்புத் தலைமைப் பீடத்துக்கு மாற்றலாகிச் சென்றார். இக்கால கட்டத்தில் நெதர்லாந்துக்குப் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று உயர்பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பினார். பின்னர் 1981 இல் மன்னாருக்கு மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் வகுப்புக்குப் பதவி உயர்வு பெற்ற மக்பூல், 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபராகவும், மாவட்டச் செயலாளராகவும் பதவியேற்று இறையடிசேரும் வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார். 


தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டக் காணியதிகாரியாகக் கடமையாற்றிய வேளையில் இன, மத பேதமற்ற இவரது சேவைகள் மூலம் தமிழ் மக்கள் இதயத்தில் இடம்பிடித்தார்.திருவையாறு படித்த மகளிர் திட்டம், விஸ்வமடு படித்த வாலிபர் விவசாயத் திட்டம், கனகாம்பிகை குடியேற்றத் திட்டம், காணியற்ற விவசாயிகளுக்கு காணி வழங்கி விவசாயியை ஊக்குவிக்கும் திட்டம் என்பவற்றைச் செயற்படுத்தி, கிளிநொச்சி மக்களின் விவசாய அபிவிருத்திக்கும், விவசாயக் குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் ஓய்வின்றி உழைத்தார். 


மன்னார் மாவட்டத்தில் வன்முறையை காரணம் காட்டி, நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் நிறைவேற்றப்படவிருந்த நீர் விநியோகத் திட்டத்தை இரத்துச் செய்ய முயன்றபோது, உடனடியாக செயற்பட்டு நெதர்லாந்து தூதுவராலயத்தினரோடு வாதாடி அத் திட்டத்தை செயற்படுத்தினார். மன்னார் நகரின் மின் விநியோகத் திட்டம் தடைப்பட்டபோது, உயர் அதிகாரிகளுடன் வாதாடி, மேலதிக மின்னுற்பத்தி இயந்திரங்களைப் பெற்றுக் கொடுத்து மின் விநியோகத்தைச் சீராக்கினார். 1984 ஆகஸ்ட் கலவரங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்களின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க உதவியதுடன் உலக வங்கிக் குழுவினரை, மன்னார் மாவட்டத்துக்கு அழைத்துவந்து புனர்வாழ்வு, புனரமைப்புக்கு உலக வங்கியின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார். மன்னார் ஆஸ்பத்திரியில் முஸ்லிம் ஜனாஸாக்களை தனியாக வைப்பதற்கான கட்டிடம் அமைப்பதற்கும் பாடுபட்டார். மானிட நேயன் மக்பூல் அவர்களைப் பற்றி அறிஞர்களும், உயர் அதிகாரிகளும் அவரது நினைவு மலரில் குறிப்பிட்டுள்ளவரிகள், அவரது இன,மத, பேதமற்ற சேவைக்கும் உயர்ந்த பண்புக்கும் சிறந்த சான்றுகளாகும்.


முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான  சீ.வீ.கே. சிவஞானம் அவர்கள் மக்பூலைப் பற்றிக் குறிப்பிடுகையில், "மக்பூல் அவர்கள் தோற்றத்திலும் நடவடிக்கையிலும் முழுமையாக யாழ்ப்பாண தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலித்த ஒருவராவார். அவருடைய தமிழ் அறிவும், ஆர்வமும், எளிமையாகப் பழகும் தன்மையும், இனிய குணாதிசயங்களும் மிகவும் போற்றத்தக்கவை. யாழ் முஸ்லிம்களின் வளர்ச்சி வரலாற்றில் அமரர் மக்பூலின் பெயர் நிச்சயம் இடம்பெறும். யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏனைய தமிழ் பேசும் மக்களோடு இணைந்து ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் வாழ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் சமூக ஒற்றுமைக்காக எப்போதும் செயற்பட்டு வந்த அமரர் மக்பூல் அவர்களின் இழப்பு, உண்மையிலேயே ஒரு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது." என விதந்துரைத்துள்ளார். 


ஈழத்தின் நாவல் இலக்கிய முன்னோடியான சுபைர் இளங்கீரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "மக்பூல் மனிதாபிமானம் மிக்கவர் பாதிக்கப்பட்டவர்களிடம் அவருக்கு மிகுந்த மனிதாபிமானம் இருந்தது பொது சேவைகளில் முன்னிற்பவர் பொம்மை வெளிக்குடியேற்ற சாதனையுடன் 1978இல் பலரது குடிசைகள் தீக்கிரையான பொழுது அவர்களுக்கு உதவிகளை செய்ததுடன் எரிந்த வீடுகளுக்கு பதிலாக அரச உதவியுடன் புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கும் உதவினார். இப்பொதுச் சேவைகளை அவர் புகழுக்காக செய்யவில்லை. அவரது மனிதாபமானத்தாலும் சமூக உணர்வினாலும் ஆற்றிய சேவைகளாகும்.”


யா/ மஸ்ர உதீன் பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹும் எம்.எஸ்.ஷிகாப்தீன் அவர்கள், "மக்பூலுடைய ஆழமான அறிவு, உயர்ந்த ஆளுமை, பாதிக்கப்பட்டவர்களது துயர் துடைக்கும் தன்மை, சகிப்புத்தன்மை, இன, மத, பேதமின்றி சேவை, தாய்மொழி பற்று ஆகிய உயர் பண்புகளால் சகலராலும் மதிக்கப்பட்டு வந்தார்." என குறிப்பிட்டுள்ளார். 


முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய க.பொன்னம்பலம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இஸ்லாமியப் பண் பாட்டில் ஊறிய மக்பூல் அதன் 'உலகு தழுவிய சகோதரத்துவம்’ எனும் உயர் நெறியை தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார்."


 கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய சொ.அமிர்தலிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார். "தனது சேவைக் காலத்தில் எந்தப் பொது மகனையும், இன்முகத்துடன் வரவேற்று, அவரது பிரச்சினையை தீர, அமர, ஆலோசித்து முடிவுகளை உடனுக்குடன் எடுத்து வந்தார். பிற்போடுவது என்பது இவரது வாழ்க்கையில் இருந்ததில்லை. இளமையிலேயே நிர்வாகத்துறையில் கால் நூற்றாண்டு கால சேவையாற்றிய இந்த நிர்வாகியின் இழப்பு முழு நாட்டிற்குமே ஓர் இழப்பாக அமைந்து விட்டது". 


இவ்வாறு ஏழைகள் மீது இரக்கம் கொண்ட மக்பூலின் இதயத்திலும், தலைமைத்துவப் பண்பு நிறைந்த அவரது தலையிலும், ஈவிரக்க மற்றவர்கள் துப்பாக்கி ரவைகளால் துளைத்து வீழ்த்திய துயரம் மனிதத்தை நேசிப்பவர்களின் இதயத்தில் என்றுமே மாறாத வடுவாகும். நிர்வாகத் துறையில் சிறந்து விளங்கிய அன்னாரின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும்.


No comments

Powered by Blogger.