JVP யின் இந்திய பயணம், கலாநிதி பிரதீப் அம்பலமாக்கும் முக்கிய விடயங்கள்
இந்தப் பயணம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுமா என கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் அரச கொள்கை ஆய்வுப் பிரிவின் பிரதானி கலாநிதி பிரதீப் பீரிஸிடம் பிபிசி வினவியது.
அதற்குப் பதிலளித்த அவர், ''நாட்டு மக்கள் வாக்களித்தாலும், இலங்கைக்கான தலைவரைத் தெரிவு செய்வது நாட்டிற்கு வெளியிலுள்ள நபர்கள்" எனக் கூறினார். ''நாட்டைச் சூழவுள்ள பூகோள அரசியலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடாமல், இலங்கையின் எதிர்காலத் தலைவராக எப்போதும் வர முடியாது."
''இலங்கையில் இருந்து நாம் வாக்களித்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களால் வாக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன."
''பெரும்பாலும், அநுர குமார திஸாநாயக்க அல்லது தேசிய மக்கள் சக்தி நாட்டின் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற எதிர்பார்க்குமானால், கட்டாயம் உலகின் வலுவான நாடுகளுடன் ஏதோவொரு புரிந்துணர்வை வைத்துக்கொள்வது அவசியமாகின்றது."
''அப்படியில்லையென்றால், இலங்கையிலுள்ள பிரதான கட்சி ஒன்றுக்கு அதிகாரத்திற்கு வர முடியாது"
''அதனாலேயே, அநுர குமார திஸாநாயக்க இந்த விஜயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். அதனாலேயே இந்தியாவும் அழைப்பு விடுத்திருக்கின்றது."
''தென் சீனா மற்றும் தெற்காசியாவின் பூகோள அரசியல் என்றும் இல்லாதளவிற்கு தற்போது தீவிரமடைந்துள்ளது."
''அதற்கான காரணம், தனி அதிகாரத்திற்குப் பதிலாக, கூட்டு அதிகாரம் என்ற கலாசாரத்திற்கு உலகம் தள்ளப்படுகின்றது."
''இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த வளையத்திற்குள் தமது அதிகாரங்களை வைத்துக்கொள்வதற்கு விருப்பம் காணப்படுகின்றது. அதனால், எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் நபர்கள் தமது திட்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ளும் தேவை அவர்களுக்கு உள்ளது."
''அதனாலேயே அவரை அழைத்திருக்கக்கூடும். அதில் சற்று நேர்மறை அம்சங்களும் காணப்படுகின்றன," என கலாநிதி பிரதீப் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
''இந்தியப் பெருங்கடல் வளையத்தின் அதிகாரம் மிகுந்த தரப்பினர், தமக்கு அவநம்பிக்கை கொண்ட குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தடுப்பதற்கும், அவ்வாறான குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் என எண்ணும் பட்சத்தில் அவர்களுடன் ஏதோ ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் முயற்சி செய்வார்கள்," என அவர் கூறுகின்றார்.
இதில் இரண்டு விடயமே தற்போது இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்திகளைத் தற்போது அவதானிக்கும்போது, சோசலிச அரசியலில் இருந்து விடுப்பட்டு, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சமூக ஜனநாயக அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார். BBC
Post a Comment