அல்லாஹ்வின் நாட்டம் இப்படித்தான் இருந்துள்ளது...
- எம்.எம்.எம். ரம்ஸீன் -
நமது நாளாந்த வாழ்வில் இடம்பெறும் எதிர்பாராத சில சோக சம்பவங்கள் எம்மை ஒரு கணம் நிலைகுலைய வைத்து விடுகின்றன.
இந்த வரிசையில், கம்பளையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவம் ஒரு சில நிமிடங்களில் நாட்டு மக்களை சோகத்திற் தள்ளிவிட்டது.
கடந்த 5 ஆம் திகதி நாட்டில் 2 ஆம் தவணை விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமாகும் முதல் நாள்.
கம்பளை நகரை அண்டிய பிரபல தனியார் பாடசாலையிலும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களில் ஆரம்ப பிரிவில் பாலர் பாடசாலை சிறார்களும் அடங்குவர். இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை மாணவர்கள் கற்கின்றனர்.
சம்பவ தினம் ஆரம்ப பிரிவில் பாலர் பாடசாலையில் கற்கும் சிறார்கள் இடைவேளையின் போது முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இவர்களுள் கம்பளை நகரை அண்டிய இல்லவதுரை பகுதியில் வசிக்கும் ஐந்து வயது நிரம்பிய முஹம்மத் ஸெய்ன் அஸ்வியும் குதூகலம் மேலிட நண்பர்களுடன் இருந்துள்ளார். அப்போது காலை 9.20 இருக்கும், யாரும் சற்றும் எதிர்பாராத சோக சம்பவம் அப்போதுதான் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு எல்லைக்கு அப்பால் இருந்த காணியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த சுமார் 70 அடி உயரமிக்க மரமொன்று காற்றினால் முறிந்து இதன் பாரிய கிளையொன்று சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் பலத்த சத்தத்துடன் மதிலை உடைத்துக் கொண்டு விழுந்துள்ளது.
இதனால், பாடசாலை முற்றத்தில் ஆபத்தை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பீதியில் அலறிக் கொண்டு நாலாபக்கமும் ஓடியுள்ளனர். எனினும், துரதிஷ்டவசமாக மூன்று சிறார்கள் பாரிய கிளைக்குள் சிக்கி காயமடைந்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முஹம்மத் ஸெய்ன் அஸ்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏனைய சிறார்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம் பெருந்திரளானோர் முன்னிலையில் அன்றிரவு கம்பளையில் இடம்பெற்றது. எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா இம்மழலை மொட்டின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக. ஆமீன்.
இப்பாடசாலை சூழலில் இயற்கை அனர்த்தத்திற்கு எதுவித வாய்ப்புமற்ற நிலையில் இடம்பெற்ற இச்சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் இறைவனின் நாட்டத்தை நினைவூட்டியுள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.
“எமது பகுதியில் இக்காலம் காற்று வீசும் காலம் அல்ல. ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் இப்படித்தான் இருந்துள்ளது. இதனை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லோருக்கும் இச்சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று அங்கிருந்த பிரமுகரொருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை எட்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். – Vidivelli
Post a Comment