Header Ads



இஸ்ரேல் - இலங்கைக்கு இடையில் பேசப்பட்டுள்ள விடயங்கள்


இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் திருமதி மிரி ரெகேவ் (Miri Regev) அண்மையில்   போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவைச் சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சின் அலுவலகத்தில் இவ்விசேட சந்திப்பு  நடைபெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான  இராஜதந்திர ரீதியில் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில்  இதில், கவனம் செலுத்தப்பட்டது. 


இஸ்ரேலின் போக்குவரத்து, விவசாயம், கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளில் புத்தாக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப முறைகள் மற்றும் அறிவை இலங்கை பெற்றுக்கொள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.


இஸ்ரேலின் அதி நவீன புத்தாக்க தொழில்நுட்பம் இலங்கையின் போக்குவரத்துத் துறைக்கு மிகவும் முக்கியமானது என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.


பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் தற்போது அந்நாட்டில் அதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் கீழ் மிகவும் பாதுகாப்பான,  வசதியான நிலைமைகளின் கீழ் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.  எதிர்காலத்தில் இலங்கையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். நாட்டின் போக்குவரத்து துறை உட்பட சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்துக்காக, எதிர்காலத்தில் இஸ்ரேல் தொடங்கவுள்ள  சுற்றுலா விமான சேவைகள், கடல்சார் துறையில் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்தும் அமைச்சர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.


இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோன் (Naor Gilon) இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சின் உட்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் அவ்னர் ஃப்ளோர் (Avner Flor), இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதுவர் தினேஷ் ரொட்ரிகோ, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்ஷிகா ஜயசேகர மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.