Header Ads



இது ஒரு ஆபத்தான நிலை - சஜித்


பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியதா இல்லையா என்பது ஊடகங்களிலும் சமூகத்திலும் இன்று பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு அங்கீகாரம் கிடைத்ததாக சபாநாயகர் ஊடகங்களுக்கு தெரிவித்த போதிலும், அரசியலமைப்பு பேரவையின் தலைவராக தற்போதைய சபாநாயகர் அரசியலமைப்பின் உயர் சட்டத்தை மீறி நாட்டிற்கு பொய் கூறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பொலிஸ் மா அதிபர் நியமன முன்மொழிவு அன்றைய நிகழ்ச்சி நிரலில் கூட இருக்கவில்லை. அன்று காலை 11.30 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூட வேண்டியிருக்கும் நேரத்தில் 9.50 மணிக்கு பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் பரிந்துரை வந்தது. இங்கு வாக்கெடுப்பு நடந்த போது பிரதமர், நிமல் சிறிபால, சாகர காரியவசம் மற்றும் சிவில் சமூக உறுப்பினர் திருமதி அனுலா ஆகியோர் சார்பாக வாக்களித்தனர். நானும் வெளிநாடு சென்றுள்ள கபீர் ஹாஷிமும் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு ஆட்சேபம் தெரிவித்தோம். மேலும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இருப்பினும் சபாநாயகருக்கு அறுதியிடும் வாக்கு மாத்திரமே உண்டு. 4 வாக்குகள் ஆதரவாகவும் எதிராகவும் இருந்தால் மட்டுமே இந்த அறுதியிடும் வாக்கை சபாநாயகரால் பாவிக்க முடியும். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இருவரினதும் வாக்கையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அறுதியிடும் வாக்கை சபாநாயகர் பயன்படுத்தியது தவறாகும். அவர் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டின் உச்சபட்ச சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் ஜனநாயகம் தொலைந்து சர்வாதிகாரம் உருவாகலாம். இது ஒரு ஆபத்தான நிலை, அரசியலமைப்பு பேரவையும் சட்டங்களை மீறினால், நாட்டு மக்களும் சட்டங்களை மீறத் தூண்டலாம். சபாநாயகர் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ்,82 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் கெகிராவ வித்யார்த்த தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (28) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.