Header Ads



ஆட்சியாளர்கள் ஆட்டம் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றார்கள் - உயர்நீதிமன்றத்தில் ஹக்கீம் கூறிய விடயங்கள்


பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதால், அதனை சட்டமாக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு, சர்வசன வாக்கெடுப்பும் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், செவ்வாய்க்கிழமை(30) உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். 


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (Anti Terrorism Bill)கேள்விக்குட்படுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்திருந்த SD.SC.No.27.24 இலக்க சிறப்பு நிர்ணய மனு(Special Determination Application) அன்றைய தினம் ,உயர் நீதிமன்றத்தில் ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் தாமாகவே வாதங்களை முன் வைத்தார் .


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ,நீதியரசர்களான விஜித் மலல்கொட,ஏ.எச்.எம்.டீ.நவாஸ்,ஷிரான் குணரட்ண,அருண ஒபயசோசேகர ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வெவ்வேறு 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


அவரது நீண்ட வாதத்திலிருந்து ஒரு  பகுதி வருமாறு,


 இந்த உத்தேச சட்டமூலம் ஒரு பொ லிஸ் ராஜ்ஜியத்தையே உருவாக்கப் போகின்றது. அதனூடாக பயங்கரமும், பயமுறுத்தல்களும், அவற்றின் விளைவாக க இளைஞர்களை அணி திரள  வைப்பது போன்றவையும் நிகழும் அபாயம் இருக்கின்றது. எங்களுக்கு வயது முதிரும்போது, சட்டங்களுக்கு மதிப்பளித்து கட்டுக்கோப்போடு வாழக்கூடிய, நற்பிரஜைகளை உருவாக்க கூடிய விதத்தில் ஓர் அடிச்சுவட்டை விட்டுச் செல்ல வேண்டும்.


 இன்று சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை "பயங்கரவாதம்" என்பதற்கு வித்தியாசமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன.


 நாட்டில் அவ்வப்போது தோன்றும் நிலைமைகளைக் கையாள்வதற்கு புதிய அரச நடவடிக்கையாக குறித்த சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. நிகழ்நிலை காப்பு சட்டத்தை(Online safety Bill) எடுத்துக் கொண்டால் ,அதன் 57 பிரிவுகளில் 30 திருத்தங்கள் காணப்படுகின்றன .இவ்வாறாக ஏனைய சட்டமூல சட்டமூலங்களுக்கு அது முன்மாதிரியாக இருக்கப் போகின்றது.


தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்ற ,அமைதி நிலவிய காலங்களில் கூட சட்டங்கள்   துஷ்பிரயோகம் பண்ணப்பட்டு வந்திருக்கின்றன. அவ்வாறே,அச்சுறுத்தலற்ற காலங்களில் கூட இந்த சட்டத்தின் சில சரத்துக்கள்  துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய நிலைமை ஏற்படலாம். அதற்கான வரலாற்று பின்னணி இருந்திருக்கிறது .


எனது 30 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கையில், ஒவ்வொரு அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் பல்வேறு சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது . அந்த 30 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் போதிய பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் ,அவசரகால சட்டத்தின் கீழ்  நிலைமையை  தக்கவைத்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. எதிர்க்கட்சியை விட ஒரு ஆசன வித்தியாசத்தில் கூட அரசாங்கம் முன்னெடுக்கப்பபட்டிருக்கின்றது.


  உண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய சந்தர்ப்பத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய வாய்ப்பும் இருந்திருக்கின்றது.


இவ்வாறான சட்டமூலங்களை பரிசீலிக்கும் போது கறை படிந்த பயங்கரவாத தடைச் சட்டம்(PTA) போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .


பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம்(Public Security Ordinance)  ,ஐ சி சி பி ஆர் (ICCPR)சட்டம்,  புனர்வாழ்வு சட்டம்(Rehabilitation Bureau Bill),19 போன்றவற்றையும் சுட்டிக்காட்டி அவர் வாதிட்டார்.வேறு ஆதாரங்களையும் முன்வைத்தார்.


 "அரகலய "போராட்டம் மற்றும் அதன் பின் விளைவுகளால் ஆட்சியாளர்கள் ஆட்டம் கண்டு ,அதிர்ந்து போயிருக்கின்றார்கள் என்பது இவ்வாறான சந்தர்ப்பத்தில் நன்றாகத் தெரி கிறது என்றார்.


இந்த வழக்கில்,சட்டத்தரணி தர்மராஜ் தர்மஜாவின் அனுசரணையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி  ரவூப் ஹக்கீமுடன் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கனிஷ்ட சட்டத்தரணிகளாக  ஷிபான் மஹ்றூப், ஹபீப் றிபான்,மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோரும் மன்றில் தோன்றியிருந்தனர்.

No comments

Powered by Blogger.