Header Ads



நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் இணங்கவில்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு



நிகழ்நிலை காப்பு சட்டத்தின் சில பிரிவுகள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் இணங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.


இந்த குறைபாடுகள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனியவின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 


நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் 30-க்கும் மேற்பட்ட பிரிவுகள் அரசியலமைப்புடன் இணங்கவில்லையென உயர் நீதிமன்றம் அடையாளப்படுத்தியிருந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு தெரியப்படுத்தியுள்ளது. 


உரிய திருத்தங்களுக்கமைய, சட்டமூலத்தை நிறைவேற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதிலும், அந்த திருத்தங்கள் முழுமையாக அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதை காண முடியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ஐந்து விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 


உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் உள்ளடக்கப்படாமல் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையின் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குள்ள வாய்ப்புகள் தொடர்பில் கவலைக்குரிய நிலை தோன்றியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளமையினால், மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்ட போதிலும் சாதாரண பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றிக்கொண்டமையை சாதாரண நிலைமையாக கருத முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சட்டம் முழுமையாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கு இணங்க முன்வைக்கப்பட வேண்டுமென்பதுடன், அதனூடாக இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.