Header Ads



சோசலிசவாதிகள் எலிகளாக மாறிவிட்டனர்


அரசாங்கமானது நாட்டில் 31 க்கும் மேற்பட்ட கால்நடை பண்ணைகளை முழுமையாக விற்க முற்பட்டு வருகிறது. சில சோசலிச ஜாம்பவான்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வந்த பிற்பாடு எலிகளாக மாறி, விலை மனு முறையில் பண்ணைகளை விற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிறம் மாறும் அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காகவே நிறம் மாறி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வாய் பேச்சு வீறாப்பால் தம்பட்டம் அடிக்கும் தலைவர்கள்,மக்களுக்காக சேவைகளை முன்னெடுத்தவர்கள் இல்லை.'வாய் உள்ள இடத்தில் வேலையும் இருக்க வேண்டும்' ஆனால் அவர்களிடம் வெறும் வாய்ப்பேச்சு மாத்திரமே உள்ளது. எனவே நாட்டின் கடன் சுமைக்கு அவர்களால் தீர்வை வழங்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 104 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் பொலன்னறுவை, எலஹெர சேகல மகா வித்தியாலயத்திற்கு 

வழங்கி வைக்கும் நிகழ்வில் அண்மையில் (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


2019 இல் மக்கள் விரும்பிய சௌபாக்கியத்தின் தொலைநோக்கு நாட்டை துயரத்திற்கு இட்டுச் சென்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இறுதியில் நாட்டை பொருளாதார பயங்கரவாதத்திற்கு இட்டுச் சென்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩தீவிர சோசலிச தலைவர்களின் பிள்ளைகளும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கே செல்கின்றனர்.

கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவது  நல்லதல்ல என்று கூறும் தீவிர சோசலிச இடதுசாரி தலைவர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலைகளிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்களின் கதைகளில் சிக்கிக் கொள்ளாமல் அனைவரும் கல்வி கற்கும் வகையில், புதிய டிஜிடல் கல்வியில் புரட்சிக்கு தயாராகுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩பொறாமை அரசியலை கைவிடுங்கள்!


பொறாமை அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு,பொறாமை அரசியல் பார்வைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையை உண்மையாக பாருங்கள்.இப்போதும் நெல்லுக்கு உரிய விலை இல்லை. விவசாயிக்கோ நுகர்வோருக்கோ நீதி கிடைக்காது இடைத்தரகர்கள் பெரும் இலாபம் அடைந்து வருகின்றனர். எனவே, அரிசி மாபியாவால் கட்டுப்படுத்த முடியாத விலைச்சூத்திரத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு விலைசூத்திரத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது. குறித்த பெரும் அரிசி ஆலைக்காரர்கள் தேர்தல்களுக்கு பணம் கொடுப்பதே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩நாங்கள் மாத்திரம் தான் திருடர்களுடன் டீல் போடாதவர்கள்!


தேர்தல் காலத்தில் நெல்லுக்கு உத்தரவாத விலை தருவதாகச் சொன்னாலும்,ஆட்சிக் கதிரையில் ஏறிய பின் திருடர்களுடன் டீல் போடும் ஆட்சியாளர்களே நாட்டில் இருந்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்திக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் மாத்திரமே திருடர்களுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.