வெலிகம பாரி அரபுக் கல்லூரி மீண்டும் திறப்பு
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த வெலிகம, கல்பொக்க மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி நேற்று முன்தினம் 30 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அப்துல் ரஹ்மான் (மலாஹிரி) தெரிவித்தார்.
குறிப்பிட்ட கல்லூரியின் மாணவர் ஒருவர் கல்லூரி ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து திணைக்களம் கல்லூரியை கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடிவிடும்படி பணித்திருந்தது.
இவ்விவகாரம் தொடர்பில் வெலிகம பொலிஸாரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வெலிகம பொலிஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோரை அழைத்து சமாதான முயற்சியொன்றினை முன்னெடுத்து வெற்றியும் கண்டனர்.
இவ்விவகாரம் சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதையடுத்து திணைக்களம் அரபுக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கியதையடுத்தே கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான மாணவர் வெலிகம – பாரி அரபுக்கல்லூரிக்கு அண்மையிலுள்ள பிறிதோர் மத்ரஸாவில் இணைந்து கல்வியைத் தொடர்வதாக பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துல் ரஹ்மான் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் இணைத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. கல்லூரியின் பணிப்பாளர் சபையே தீர்மானம் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். – Vidivelli
Post a Comment