Header Ads



ஜனாஸாக்களை அடக்க கோட்டாபய தடை விதித்தமையால் வெறுப்பும் குரோதமும் விதைக்கப்பட்டிருந்தது


நாடு வங்குரோத்தான இந்நேரத்தில், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து சரியான பாதையின் ஊடகாவே வெளிவர வேண்டும். இனம், மதம், சாதி, மொழி, குலம், வர்க்கம் என்ற வேறுபாடுகளை நாம் மறந்துவிட வேண்டும். போராட்டத்திற்கு முன் இனவாதமும் மதவாதமும் உச்சத்தில் இருந்தது. ஜனாதிபதி கோட்டாபய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி சடலங்களை அடக்கம் செய்வதற்கு தடை விதித்தார். இதனால் நாடு முழுவதும் வெறுப்பும் குரோதமும் விதைக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பொதுவாக, எரிவாயு, டீசலுக்கு வரிசையில் நிற்கும் போது, ​​இன, மத பேதங்களை எல்லாம் மறந்து நாட்டையே அழித்த ஜனாதிபதியை ஒன்றாய் இணைந்து கழுத்தை பிடித்து தூக்கி எறிந்தனர். நாடு வங்குரோத்தடைந்து, அனைவருக்கும், உண்ணவோ, குடிக்கவோ முடியாமல் போன  போது, ​​மக்கள் இந்தக் குறுகிய வேறுபாடுகளை மறந்து நாட்டைக் காக்கவே ஒன்றாய் முன்வந்தனர். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு குறுகிய, அப்பாவித்தனமான, முதிர்ச்சியற்ற கீழ்தர செயற்பாடுகள் விட்டொழிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 110 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மாத்தளை,ரத்தோட்டை, அந்-நூர் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் அண்மையில் (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


நாட்டின் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு புதிய தொழில்நுட்பம் கிடைக்காதது பிள்ளைகளின் தவறல்ல, நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் தவறாகும். ஆட்சியாளர்கள் சரியான தீர்மானங்களை எடுக்காத காரணத்தினால் கல்வியில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பிரிவினையையும் ஏற்றத்தாழ்வையும் இல்லாதொழிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩நாட்டின் பாடசாலைகளில் நிலவி வரும் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரே தீர்க்க வேண்டி ஏற்பட்டுள்ளது.


தற்போது நாடு ஸ்தம்பித்துள்ள நிலையில், நாட்டின் பாடசாலைகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சரே என்றாலும்,அந்நிலை மாறி எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுமே என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எந்த எதிர்க்கட்சியும் செய்யாத சேவையை ஐக்கிய மக்கள் சக்தியும்,ஐக்கிய மக்கள் கூட்டணியும் நிறைவேற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.