இவ்வருட தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து உண்மையான அரசாங்கத்தை உருவாக்க முன்வர வேண்டும்
அனுராதபுரத்தில் இன்று(17) இடம்பெற்ற பிக்குகள் ஆலோசனை பேரவையின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சசுனட அருண வேலைத் திட்டத்திற்குக் கூட சேறு பூசினர்.
சாசன கல்வியுடன் பிரிவெனாக் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம், இந்த நிறுவனங்கள் புத்திஜீவிகளின் மையங்களாக மாற்றப்படும். சசுனட அருண ஊடாக பல பணிகளை செய்திருந்தாலும், அந்த திட்டங்களுக்கும் பல்வேறு பொய்யான சேறுபூசும் கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இதனை பொருட்படுத்தாது, ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தஹம் பாடசாலை பரீட்சைகளைக் கூட நடத்த முடியாத அரசாங்கம் இது. தஹம் பாடசாலை பரீட்சைகளை நடாத்தி சான்றிதழ்களை வழங்க தவறிய இந்த அரசாங்கம், மிஹிந்தலை புனித விகாரையின் மின்சாரத்தை துண்டித்து மகாநாயக்க தேரர்களை திட்டி வருகிறது. இந்த முறையை மாற்றி நடைமுறை ரீதியான பௌத்தர்கள் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா?
தலதா மாளிகை மீது குண்டு வைத்தவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த வன்முறைகள் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு நல்லாட்சி உருவாக்கப்பட வேண்டும். குடும்ப வாதத்தை இல்லாதொழித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
குடும்பவாதம் நாட்டையே அழித்தது.
பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர், அம்மரியாதை, கௌரவம் முப்படைகளுக்கு செல்ல வேண்டும், ஆனால் அந்த மரியாதையையும் கௌரவத்தையும் ஒரு சில குடும்பங்கள் எடுத்துக் கொண்டன. அவ்வாறு எடுத்துக் கொண்டு, நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, நாட்டில் பொருளாதார பயங்கரவாதத்தை செயல்படுத்தி, நாட்டையே அழித்தார்கள். இதன் காரணமாக 90 பில்லியன் டொலர் மதிப்பிலான கடனில் நாடு மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஒருவர் 12 இலட்சம் கடனில் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வருட தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொருளாதார பயங்கரவாதிகளை விரட்டியடித்து நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உண்மையான அரசாங்கத்தை உருவாக்க முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment