Header Ads



மலையக கட்சிகளுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட சஜித்


எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மலையகம் மற்றும் தென் பகுதிய பெருந்தோட்டத் துறையில் உள்ள சமூகத்துடன் இன்று ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு, மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார,சமூக ரீதியான  அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இன்று (14) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில், மலையக, தென்பகுதி பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி, பல்வேறு தோட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், சுமூக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.


இலட்சக்கணக்கான மலையக மற்றும் தென் பகுதி பெருந்தோட்ட சமூகங்கள் நாட்டின் உயிர்நாடிக்கு பங்களித்து வருவதால், அவர்களை எப்போதும் கூலித்தொழிலாளிகளாகவே வைத்திருக்காது, அவர்களுக்கு பயிர்ச்செய்கை நில உரிமை மற்றும் வீட்டுரிமைகளை வழங்குவதோடு, பெருந்தோட்டத் துறையில் பெருந்தோட்ட தொழில் முயற்சியாளர்களாக பணியாற்றும் பெரும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாவதாகவும், இது வரை இரண்டாம், மூன்றாம் வகுப்பினர் எனும் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்த சமூகத்திற்கு, வார்த்தைகளோடு மட்டுப்பட்ட கோஷங்களை கடந்து, ஒரு குறித்த காலக்கெடுவுக்கு உட்பட்ட வகையில், இந்த மக்களை வலுவூட்ட, தெளிவான சமூக இணக்கப்பாட்டை எட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிறுவப்பட்ட முதல் நாளிலிருந்தே, இந்த பிரச்சினைகள் அனைத்தையும் கலந்துரையாடுவதற்கு பதிலாக, இந்த சமூக ஒப்பந்தத்தை நடைமுறை ரீதியாக யதார்த்தமாக்குவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர், இந்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறலாம் எனவும், அரசியல் சூழ்ச்சிகளால் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்ட சமூகத்திற்கு, பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்வதே, ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மையான பணி என்றும் அவர் தெரிவித்தார்.


மலையக, தென் பகுதி பெருந்தோட்ட சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும், தமது சொந்த பதவி சலுகைகளை விடுத்து, தமது சமூகத்தை பாதுகாத்து அபிவிருத்தியின் விடியலை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுடன் இப்படியான சமூக ஒப்பந்ததை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


இந்த உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனணி தலைவர் வி.இராதாகிருஷ்ணன், கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

No comments

Powered by Blogger.