Header Ads



ரணிலைத் தவிர வேறு ஒரு, ஜனாதிபதியை பற்றி சிந்திக்கக் கூடாது



போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.


மேலும், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ்,


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை.


இந்த வேலைத்திட்டம் தொடர்பில் எம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த செயற்பாட்டைச் சீர்குலைக்க பல்வேறு நபர்களும் குழுக்களும் முயற்சித்து வருகின்றனர். போதைப்பொருள் வலையமைப்பு மூலம் பணம் பெறுபவர்கள் அந்தக் குழுக்களுக்கு பணத்தை செலவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபாவாகும். பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் பெறுமதி 725 மில்லியன் ரூபா. அதற்காக செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 58,562. அந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,234 ஆகும்.


மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு 


முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளன. அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வில் சித்தி பெறுபவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.


புதிய அடையாள அட்டையை ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதையும் கூறவேண்டும். தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக, (Dangerous Drugs Control Board)  போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக பாடசாலைகள் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

  

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த நாம் அனைவரும் ஆதரவு வழங்குகிறோம். இந்த நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவும், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்தது. நிலைமையை புரிந்து கொண்டவர்கள் வேறொரு ஜனாதிபதியைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து கொண்டார்.


இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு தாமதம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பதில் பொலிஸ் மா அதிபர், பதவி உயர்வில் அதிருப்தியடைந்த அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால்  பதவி உயர்வுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


இது தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகம் என்பன சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதன் மூலம் இந்தப் பிரச்சினைகள் மிக விரைவாக தீர்க்கப்படும். 


மேலும், கடந்த காலங்களில் பொலிஸ் கனிஷ்டதர அதிகாரிகளுக்கு பல பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. அவ்வாறே எதிர்காலத்திலும் உரிய பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு  

21.02.2024

No comments

Powered by Blogger.