Header Ads



சனத் நிஷாந்த உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இப்படி நடந்திருக்காது


சனத் நிஷாந்த உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இப்படி நடந்திருக்காது. நானும் வேலையை இழந்து நான் வாழ வழியின்றி இருக்கின்றேன் என முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிரபாத் எரங்க துல்நேஷா தெரிவித்துள்ளார்.


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.


இந்த வழக்கு விசாரணையின் போது வெலிசறை நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான முன்னிலையில் நேற்று (19) அவர் சாட்சியமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


சனத் நிஷாந்தவின் மனைவி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனராஜ் சமரகோன், சந்தேகநபர் பிரபாத் எரங்க துல்நேஷாவை வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.


இந்த வழக்கு விசாரணையின் போது சனத் நிஷாந்தவின் கார் மீது மோதிய கொள்கலன் பார ஊர்தியின் சாரதியும், சனத் நிஷாந்தவின் காரை ஓட்டிச்சென்ற சாரதியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.


இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த கந்தானை பொலிஸ் உத்தியோகத்தர்கள், இந்த வாகன விபத்து தொடர்பான விசாரணைகளின் கோப்புகள் பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் கிடைத்த பின்னர் இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக கந்தானை பொலிஸ் அதிகாரிகள் மேலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.


சனத் நிஷாந்தவின் மனைவியின் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி தனராஜ் சமரகோன், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும், அவர் வெளிநாடு செல்லவுள்ள நிலையில் அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.


இதன்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தானை பொலிஸார் சந்தேகநபரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோரவில்லை எனவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தடை விதிக்க வாய்ப்பில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதனடிப்படையில் குறித்த கோரிக்கைக்கு அனுமதி மறுத்த நீதவான் சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கந்தானை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.