சட்டவிரோத மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
காட்டு யானைகளின் ஊடுருவல்களில் இருந்து பண்ணையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மின் பாய்ச்சப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக வேலிக் கம்பிகளில் மின் பாய்ச்சியதாகக் கூறப்படும் சந்தேக நபரான பண்ணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் புதன்கிழமை 14.02.2024 உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சையடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலேயே இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை 13.02.2024 இடம்பெற்றுள்ளது.
இந்த விபரீதத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் (வயது 51) என்பவரும், விநாயகமூர்த்தி சுதர்சன் (வயது 21) எனும் இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி விபரீதம் இடம்பெற்ற அதே பண்ணையில் கடந்த வருடமும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Post a Comment