சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல், எம்மோடு இணைந்துகொள்ளுமாறு கேட்கிறோம்
இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம். எனவே, எமக்கு எதிரான பாசறையினர் எம்மீது ஆதாரமற்ற, அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்டவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய விஜயத்தை மேற்கொண்டு வந்ததன் பின்னர் இந்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எம்மீதான மிகப் பெரிய ஆர்வமும் கவனமும் அதிகரித்து வருகின்றது. எனவே, தமிழ் மக்கள் எம்மோடு இணைவதைத் தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள பல்வேறு குழுக்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை புனைந்து வருகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் இடையீட்டுடன்தான் 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டதென பொய்யான பிரச்சாரத்தை இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும்.
83 கறுப்பு ஜுலைக் குற்றச் செயல்கள் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் இடையீட்டின் பேரில்தான் மேற்கொள்ளப்பட்டன. அதுபற்றிய எழுத்திலான குறிப்புகள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை எங்களால் சமர்ப்பிக்க முடியும். 83 கறுப்பு ஜுலை கலவரத்துக்கு முன்னர் யாழ். நூலகத்தை தீக்கிரையாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பற்றிய எல்லா விடயங்களையும் எங்களால் சமர்ப்பிக்க முடியும்.
ஆனால், இந்த கலவரத்தின் பின்புலத்தை நாம் ஆராய்ந்தால் 1983 கறுப்பு ஜுலை என்பது குறிப்பாக இலங்கையில் வடக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய எல்லா மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்துவிட்ட கடுமையான ஒரு இனவாத செயற்பாடாகும். குறிப்பாக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு ஜனநாயகத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து படுமோசமான ஆட்சியைத்தான் செய்து வந்தது. அவர்கள் தொழிற்சங்கங்களை தடை செய்தார்கள். ஒரு இலட்சம் பேருக்கு தொழிலை இழக்கச் செய்தார்கள். வளர்ந்து வந்துகொண்டிருந்த தேசிய ஒற்றுமை ஒரு மட்டத்தை அப்போது அடைந்திருந்தது. இந்த தேசிய ஒற்றுமையை சிதைப்பதற்காக ஜே.ஆரும், ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையையும் அடக்குமுறையையும் பாவித்தார்கள்.
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1977 அம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கத்தை அமைக்கும்போது இந்நாட்டில் யுத்தம் இருக்கவில்லையே? ஜே.ஆர் மற்றும் ரணிலின் தவறான இனவாத அரசியலின் காரணமாகத்தான் 81, 82 இல் முரண்பாட்டு நிலைமையொன்று இலங்கையில் உருவாகியிருந்தது. 83 ஆம் ஆண்டிலே முரண்பாடு உச்சம் கண்டிருந்தது. அதன் விளைவாக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை அவர்களின் வீடுகளில் ஒப்படைப்பதுதான் அப்போது அமுலில் இருந்த நடைமுறை. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் உள்ளிட்ட கும்பல் அந்தச் சிப்பாய்களின் பூதவுடல்களை கொழும்புக்கு கொண்டுவந்து திட்டமிட்ட அடிப்படையில் மிகப்பெரிய ஒரு தாக்குதலை கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர். அத்தாக்குதல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச தலைவர்களால் இலங்கை முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. சப்பாத்து தைக்கின்ற வறிய மனிதர் முதற்கொண்டு பெரிய தொழிலதிபர்கள் வரை இதனால் பாதிப்புற்றார்கள். இலங்கையில் எத்தனையோ சினிமா தியட்டர்கள் அழிக்கப்பட்டன. கொழும்பில் ரணிலின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த காமிணீ மண்டபம் இப்போது இல்லையே! யார் தீக்கிரையாக்கியது? ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் காடையர் கும்பல்கள்தான் அழித்தன.
எனவே, 83 கறுப்பு ஜுலையை உருவாக்கியதும் அமுலாக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சிதான். ஜே.ஆர்.தான் அதன் முக்கியஸ்தர். அதேப்போல அப்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்களின் ஆதனங்கள் அழிக்கப்பட்டன. அதனையடுத்து ஜே.ஆர். ஜெயவர்தன ஒருவாரகாலம் சட்டத்தை அமுலாக்கவில்லை. பொலிசாருக்கு கட்டளையை பிறப்பிக்கவில்லை. பொலிஸ்மா அதிபர்கள் ஜே.ஆரிடம் சென்று அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரினார்கள். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. எனவே, இந்தக் கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து ஜே.ஆர். என்ன செய்தார்? மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளை தடைசெய்தார். தடைசெய்து சில மாதங்களுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சியின் தடைகளை நீக்கினார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணி 1980களில் மிகவும் பலம்பொருந்திய வகையில் வளர்ந்து வந்தது. அதாவது, இடதுசாரியின் மிகவும் பலம்பொருந்திய மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்துகொண்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் விஜேவீரவை உள்ளிட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து இந்த நாட்டின் அதிகாரத்தை இடதுசாரிகளின் கைகளுக்கு கொண்டுபோய் விடுவார்களென ஜே.ஆர். பயந்தார். எனவே, அதனை தடுப்பதற்காக ஜே.ஆர் இந்த இனவாதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை படுகொலை செய்து, அதனை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தார். ஹிட்லரும் இதைத்தானே செய்தார். ஹிட்லரின் நாசிக்கட்சி ஜேர்மன் பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். அவ்வாறு செய்துவிட்டு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றத்தை சுமத்தினார்கள். அதன் பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்து அடக்கினார்கள். ஜே.ஆரும் 83 இல் இதைத்தான் செய்தார். பின்னர் கறுப்பு ஜுலை தொடர்பாக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கலவரத்திற்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இற்றைவரை அக்குற்றச் செயல்களுக்காக ரணில் விக்ரமசிங்க இந்த தேசத்திடம் மன்னிப்புக் கோரவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவைதான் நடந்த உண்மை.
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இந்த விடயம் தெரியும். ஆனால், அக்காலப்பகுதியில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. சுயாதீன ஊடகங்கள் இருக்கவில்லை. ஓரிரண்டு செய்தித்தாள்கள் இருந்தன. ஐ.டி.என், தேசிய ருபவாஹிணி என்ற இரு இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. எனவே, அந்தநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள், அயோக்கியர்கள் புரிந்த ஆட்கொலைகளை ஜே.வி.பி. அல்லது வேறு நபர்கள் மீது சுமத்துவதற்கு வசதியாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் கோல்ஃபேஸ் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால், 83 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு ஜூலை இலங்கை வரலாற்றை முற்றாகவே மாற்றியமைத்தது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுகிறோம். இது ஆயுதமேந்திய பிரிவினைவாதத்திற்காக இளைஞர்களை வழிப்படுத்தியது. இது முட்டாள்த்தனமான கறுப்பு ஜுலையாகும். அந்தக் கலவரத்தில் உடைமைகளை இழந்த, உறவுகளை இழந்த, கைகால் முறிந்த தோழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். சரோஜா போல்ராஜ், இராமலிங்கம் சந்திரசேகர், மோகன் போன்ற தோழர்கள் அப்படிபட்டவர்கள்தான். ஜே.வி.பி. தமிழர்களை தாக்கியிருந்தால் அவர்கள் ஏன் ஜே.வி.பியுடன் இணைந்துகொள்ள வேண்டும்? அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. இனவாத ரீதியாக செயற்படவில்லை என்பதை மக்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். அப்போது நாங்கள் தமிழ் சகோதர சகோதரிகளை இயலுமான நேரங்களில் காப்பாற்றினோம். அவர்களை பாதுகாத்தோம். எனவே, வங்குரோத்து அடைந்துள்ள இந்த ராஜபக்ஸர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகப் பிரிவு
தேசிய மக்கள் சக்தி
21.02.2024
Post a Comment