கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்டவர்கள் மிரட்டியதாக கூறி, வெளிநாட்டிற்கு பறந்த பொலிஸ் பரிசோதகர்
பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு சென்றதாக கொழும்பு குற்றத்தடுப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபானை இம்ரானும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, அச்சுறுத்தும் குரல் பதிவு தொடர்பிலும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
“குறித்த அதிகாரி பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 6ஆம் திகதி வரை வெளிநாட்டு விடுமுறையை பெற்றுள்ளார். அவர் வெளிநாடு சென்ற பின்னரே இந்த தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரி கொழும்பு குற்றப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் இது போன்றவற்றை வலியுறுத்தி எந்த அறிவிப்பும் வழங்கவில்லை. அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை."
“எதோ ஒரு சந்தர்ப்பத்தில், குறிப்பிட்ட நபர் ஒருவர் மிரட்டியதாகவே அறிக்கையிட்டுள்ளார். எனினும், இந்த மிரட்டலின் குரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பித்ததிற்கு பின்னரான ஒலிப்பதிவு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த குரல் பதிவில் உரையாடும் நபர் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
"எனவே, இந்த விடயங்கள் அனைத்தையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இது உண்மையான மிரட்டல்தானா? பிறகு ஏன் அந்த அதிகாரி இதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை." என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
"இருப்பினும், இது தொடர்பில் இன்னும் தௌிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
"இந்தச் சம்பவத்தில் சந்தேகம் இருக்கிறது. இது ஏதோ திட்டமிட்ட விடயமாக இருக்கலாம் என்று.
"ஒரு தொலைபேசி அழைப்பை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் செய்யப்பட்ட அழைப்பு அல்ல. இது வழக்கமான விசாரணையின் போது சந்தேகத்திற்குரிய ஒருவரால் செய்யப்பட்ட அழைப்பு."
"அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை காலத்திற்குள் அந்த அதிகாரி இலங்கைக்கு திரும்பவில்லை என்றால், அவர் சேவையை விட்டு வெளியேறிய அதிகாரியாக கருதப்படுவார்." என்றார்.
Post a Comment