Header Ads



நடுவரை முறையற்று பேசியதற்காக தண்டனை


இலங்கை ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வணிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 போட்டியின் பின்னர் ஒழுக்கமின்றிய முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) இனால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக வணிந்துவுக்கு 1 குற்றப் புள்ளியை வழங்கவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.


இது தொடர்பில் இன்று பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 04 – 06 ஆம் திகதிகளில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ரி20 போட்டிகளில் வணிந்துவுக்கு விளையாட வாய்ப்பில்லை.


ஆப்கானிஸ்தான் அணியுடனான 3ஆவது ரி20 போட்டியின் போது, இலங்கை நடுவரான லிண்டன் ஹன்னிபல், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி ஓவரில் இடுப்புக்கு மேலாக மிக உயரமாக சென்ற பந்தை ‘நோ போல்’ என அடையாளப்படுத்தாமை தொடர்பில், நடுவரை முறையற்ற விதத்தில் பேசி, நடுவரின் முடிவுகளை விமர்சித்ததற்காகவும் அவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


குறித்த பந்தை அவரால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அவர் வேறு தொழிலுக்குச் செல்லலாம் என, வணிந்து ஹசரங்க தெரிவித்தார்.


குறித்த போட்டியின் முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.