Header Ads



திருமணத்திற்கு தயாரான உதவி விரிவுரையாளர் விபத்தில் மரணம்


கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளம் உதவி விரிவுரையாளரின் மூளை செயலிழந்ததால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய 27 வயதுடைய லக்மினி போகமுவ, அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.


பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறியொன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வேலைக்கு செல்வதற்காக விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் செல்ல முயன்ற போது, ​​பத்தரமுல்லை பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச்சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


களனிப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சந்திரசிறி போகமுவவின் ஒரே பிள்ளையான லக்மினி போகமுவ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்திருந்தார்.


இந்நிலையில், குறித்த யுவதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகவும், இறப்பதற்கு முன்னர் திருமண மோதிரங்களும், ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.