கத்தார் - இந்தியா நாடுகளுக்கிடையில் 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம்
இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது.
இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.
இந்த வாயு, மின்சார உற்பத்தி, உரத் தயாரிப்பு, மற்றும் சி.என்.ஜி.யாக மாற்றப் பயன்படுகிறது.
மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி
இந்த ஒப்பந்தம், கோவாவில் 2024-ஆம் ஆண்டு இந்திய எரிசக்தி வாரத்தின் முதல் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) கையெழுத்தானது.
தற்போது இருக்கும் ஒப்பந்தத்தை விட மிகக் குறைந்த விலையில் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் தனது அறிக்கையில், எரிவாயு இறக்குமதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 1999-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், அது 2028-ஆம் ஆண்டு வரையிலானது என்றும் கூறியிருந்தது.
இப்போது புதிய ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டு துவங்கி 20 ஆண்டுகளுக்குச் செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு வாங்கப்படும் மொத்த விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத போதும், அதன் விலை தற்போதைய ஒப்பந்தத்தை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆங்கில செய்தித்தாளான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' படி, இந்தப் புதிய ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 50,000 கோடி இந்திய ரூபாயைச் சேமிக்க வழிவகுக்கும்.
பெட்ரோநெட் நிறுவனம் இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 85 லட்சம் டன் எல்.என்.ஜி வாயுவை இறக்குமதி செய்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தானது, இது 2028 வரை செல்லுபடியாகும்.
தற்போது இது 2048 வரை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் டன்களுக்கான மற்றொரு ஒப்பந்தம் 2015-இல் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்கள்மீது தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக, இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
கத்தார் உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதியாளராக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா கத்தாரை முந்தியது.
கத்தார் ஆண்டுதோறும் 7.7 கோடி டன் எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, இதனை 2027-ஆம் ஆண்டு 12.6 மில்லியன் டன்கள் ஆக அதிகரிக்க விரும்புகிறது. இதன்மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அதன் பிடியை வலுப்படுத்த எத்தனிக்கிறது. இவ்விரு கண்டங்களில் எரிவாயு ஏறுமதிக்குள் அமெரிக்கா நுழைய முயற்சிக்கும் நிலையில் கத்தாருக்கு இது முக்கியமானதாகிறது. BBC
Post a Comment