வக்பு சட்டத்தில் திருத்தம் - நீதிபதிகள், சட்டத்தரணிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு நியமனம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள தேவைகள் மற்றும் சவால்கள் உட்பட எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களையும் கருத்திற்கொண்டு தற்போதைய வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கென புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மேன்முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் தலைவர் ஏ.டப்ளியு.ஏ.சலாம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்றினை நியமித்துள்ளது. குறிப்பிட்ட குழு தனது அறிக்கையை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக மூன்று மாத காலத்துக்குள் கையளிக்கும் படியும் பணிக்கப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டம் ஏற்கனவே 1962ஆம் ஆண்டிலும் 1983ஆம் ஆண்டிலும் இரு தடவைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு அமைவாக இச்சட்டம் மீண்டும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரபுக்கல்லூரிகளுக்கான வழிகாட்டல்கள் வக்பு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டில்லை. அத்தோடு தற்போதுள்ள வக்பு சட்டத்தில் பள்ளிவாசல்களுக்கான நம்பிக்கை பொறுப்பாளர் நியமனம் அவர்களது தகமைகள் தெரிவு செய்யும் முறைைம ,விஷேட நம்பிக்கை பொறுப்பாளர் நியமனம், பள்ளிவாசல்களின் பணியாளர்கள் குறிப்பாக இமாம், மெளலவி, கதீப்மார் நியமனம் தொடர்பில் தற்போதைய வக்பு சட்டத்தில் தேவையான வழிகாட்டல்கள் இல்லை.
பள்ளிவாசல் நிர்வாகங்களின் நிர்வாக பிரச்சினைகளில் சிறிய பிரச்சினையை கூட தீர்ப்பதற்கு பல வருடங்கள் செல்கின்றமை மற்றும் முஸ்லிம் நம்பிக்கை நிதியம் தொடர்பான விடயங்களை முறையாக குறிப்பிட்டு வக்பு சட்டத்துக்குள் உள்வாங்கல் உட்பட பல விடயங்களில் இக்குழு சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
குழுவின் அங்கத்தவர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ.டப்ளியு.ஏ.சலாம் (முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்), ஏ.ஏ.ம்.இல்லியாஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி, வக்பு ட்ரிபியுனல் உறுப்பினர்), நிப்ராஸ் நஸீர் (சட்டத்தரணி, ஹஜ் குழு உறுப்பினர்), என்.எம்.மத்தீன் (சட்டத்தரணி வக்பு சபை உறுப்பினர்), எம்.பி.ஐ.ரஹ்மான் (மேலதிக பணிப்பாளர் நாயகம் – நீர்பாசன திணைக்களம்), இஸட்.ஏ.எம்.பைசல் (பணிப்பாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை,)யு.எல்.எம்.மஜிட் (வக்பு ட்ரிபியுனல் தலைவர், முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி) – Vidivelli
Post a Comment