Header Ads



சுன்னத் செய்த போது, அடுத்தடுத்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு


வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார்.


அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே 'முழு மயக்க மருந்து' கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.


ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்ற சிறுவனும் இதேபோன்று ஆணுறுப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். அப்போதும் இதே குற்றச்சாட்டை அச்சிறுவனின் குடும்பத்தார் எழுப்பினர்.


வங்கதேசத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக, முடிதிருத்துவோர் மயக்க மருந்து இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக, மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது.


டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான டாக்டர் ஷா ஆலம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து தேவை என்று பிபிசி வங்க மொழிச் சேவையிடம் கூறினார்.


"ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இச்சம்பவத்தில் மயக்க மருந்து தேவைப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேண்டும்," என்று டாக்டர் ஆலம் கூறுகிறார்.


முறையான உடல் பரிசோதனை செய்யாமல் தவறான நேரத்தில் தவறான மயக்க மருந்து கொடுத்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர் ஷா ஆலம் தெரிவித்துள்ளார். BBC

No comments

Powered by Blogger.