Header Ads



டலஸ் அழகப்பெரும எம்முடன் இருக்க வேண்டியவர், சஜித்துடன் அல்ல - நாமல் ராஜபக்ச


தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லாட்சியின் ஊடாக நாட்டைப் பொறுப்பேற்ற போது 2020 ஆம் ஆண்டு நாடு கடனில் இருந்து விடுபடும் என்று கூறியிருந்தும் மீண்டும் ஆட்சிக்கு வந்து கடனை மறுசீரமைத்து வருகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


ஒரு இளைஞன் அரசியல் ரீதியாக பலம் பெறுவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என தாம் நம்புவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியையும், நாட்டையும் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் தற்போது ஏனைய சக்திகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்முடன் இருக்க வேண்டிய தலைவர் என தனிப்பட்ட ரீதியில் தாம் நம்புவதாகவும், 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர பெரும் சக்தியை டலஸ் அழகப்பெரும உருவாக்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ஜி. எல். பீரிஸுடன் கலந்துரையாடுவதற்கு தாம் தயாராக இருந்தாலும், அவர் தற்போது சஜித் பிரேமதாசவுடன் இருப்பதால், எதிர்காலத்தில் அது குறித்து அவர் தீர்மானிக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.