அப்பாவிகளின் உயிர்களை குடிக்கும் கொலைக் கலாச்சாரம்
தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி உபகரணக்கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த மிந்திக அளுத்கமகே என்ற 22 வயதுடைய இளைஞன் துரதிஷ்டவசமாக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மிந்திக அளுத்கம என்ற இளைஞன் மூன்று சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவர் எனவும் மூத்த சகோதரர் விமானப்படை அதிகாரி எனவும் மற்றுமொரு சகோதரர் கொரியாவில் பணிபுரிவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மிந்திக அளுத்கம கொரிய வேலைவாய்ப்பிற்காக இன்னும் சில நாட்களில் கொரியாவிற்கு செல்லவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடுகாவ பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மிந்திக தனது நண்பரின் கடைக்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கடையின் உரிமையாளரான உயிரிழந்தவரின் நண்பர் தொலைபேசி அழைப்பிற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடையின் உரிமையாளர் பிரதேசத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் இருந்து 21 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை தாக்கியதாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக உரிமையாளர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மனுவைத் தாக்கல் செய்த பின்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், நீதவானின் விசாரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவரது உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு அவரை பொலிஸ் காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், இலக்கத் தகடுகளின்றி, தலைக்கவசங்களுடன் மாத்தறையில் சதுப்பு நிலத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment