Header Ads



இரவு பகலாக பணியாற்றியவர்...


- Inamullah Masihudeen -


சிரேஷ்ட சட்டத்தரணி ஷீராஸ் நூர்டீன் அவர்களுடன் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பு!


கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி, சமூக ஆர்வலர் சகோதரர் ஷீராஸ் நூர்தீன் அவர்களை  அவரது அலுவலகத்தில் சந்திக்க விரும்பி தொடர்பு கொண்டபோது...


தனது நீதித்துறைசார் அலுவல்கள் மிகுந்த காலை வேளையில் சுமார் 45 நிமிடங்களை எனக்காக நேற்று 24.01.2024 ஒதுக்கித் தந்தார்.


போருக்கு பின்னரான இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், வன்முறைகள், பாதுகாப்பு கெடுபிடிகள், கொவிட் ஜனாஸா எரிப்பு விவகாரம் என பல சவால்களூக்கு RRT உடனடி நடவடிக்கை சட்டத் தரணிகள் குழுவை அமைத்துக் கொண்டு இரவு பகலாக பணியாற்றியவர்.


தேசிய ஷூரா சபையின் செயலாளராக எந்தவொரு அரசியல் சன்மார்க்க சிவில் சமூக தலைமைகளுடனான சந்திப்புகளில் நான் கலந்து கொண்ட பொழுதும் அங்கு ஆரவாரம் சபை அலங்காரம் எதுவுமில்லாமல் தனது பங்களிப்பை சட்டத்தரணி ஷீராஸ் நூர்தீன் வழங்குவதை காண்பேன்.


கோவிட்கால அவசரகால மற்றும் ஊரடங்கு காலகட்டங்களில் அவசர கலந்தாலோசனைகளுக்காக முஸ்லிம் லீடர்ஸ் போஃரம் என சமூக பிரதானிகளை கொண்ட குழுமத்தை நிறுவி அதனூடாக பல அரிய பணிகளை உடனுக்குடன் ஆற்றிய அவர்  தேவை கருதி என்னையும் குழும நிர்வாகிகளுள் ஒருவராக நியமித்திருந்தார்.


கட்சி அரசியல், இயக்க கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் சகல தரப்புகளுடனும் ஒருங்கிணைப்புகளை மேற் கொள்ளும் தூர நோக்குடைய பணிவும் பக்குவமும் பண்பாடுகளுமுடைய செயல் வீரர் ஆவார்.


கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனத்தை CDMF நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக கொழும்பு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார சவால்கள் குறித்த விவகாரங்களில் சக தோழர்களோடு தீவிரமாக பணி செய்பவர்.


மிகச் சிறந்த தேசப்பற்றாளர், ஜனநாயக வழிமுறைகள், நீதித்துறை, சட்டம், ஒழுங்கு, அடிப்படை மனித உரிமைகள் என  தனது பாதை பயணத்தை தீர்மாணித்து செயற்படும முன்மாதிரியான சட்டத்துறை சமூக ஆளுமை!


எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு நல்லாரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் தந்து சமூக தேசியப் பணிகளில் இன்னுமின்னும் சிறப்பாக பணியாற்றும் விவேகத்தையும் துணிவையும் அருள்வானாக!


அவரை பெற்று ஆளாக்கிய அன்பின் பெற்றார்கள் (ரஹ்) உடன் பிறப்புகள், மனைவி மக்கள், சந்ததிகளது ஈருலக வாழ்விலும் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

25.01.2024

No comments

Powered by Blogger.