Header Ads



அவலோகிதேஸ்வர பெயரில் போதனை வழங்கி வந்தவர் கைது!


அவலோகிதேஸ்வர என்ற பெயரில் போதனைகளை வழங்கி வந்த  மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


 சற்று முன்னர் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.


குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையின் அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  


கடந்த தினம் இந்நாட்டுக்கு வருகை தந்த குறித்த நபரை அவலோகிதேஸ்வர என்று அழைத்து அவரது பக்தர்களால் வழிபடுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.


அவர் சொகுசு காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்த விதம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட குழுவினர் அவரை வழிபடும் விதமும் அதில் அடங்கியிருந்தது.


அவர் மீது விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இதன்படி, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணையின் முன்னேற்றத்தை கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.


சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த நபருக்கு பயணத் தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய அனுமதிக்கவும் நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார்.


அதற்கு அனுமதி வழங்கிய கோட்டை நீதவான் திலின கமகே, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.