யாழில் உதித்த பணி கொழும்பில் அஸ்தமிக்கும் வரை பிரகாசம் மட்டும் மங்கவில்லை
கொழும்பு ஸாஹிராக்கல்லூரியில் கடந்த 12 வருடங்களாக கணித, விஞ்ஞான ஆசிரியராகவும், கல்லூரியின் ‘தமிழ் அமுதம்’சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய ஆசிரியர் யாழ் அஸீம் அவர்களது பிரியாவிடை வைபவம் அண்மையில் கல்லூரியின் அப்துல்கபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் சக ஆசிரியர் சஜாத் முகைடீன் வாசித்த வாழ்த்துப்பா.
✍️சஜாத் மொஹிதீன்
————————————-
ஞாபகங்கள் கனத்து
கண்ணீராய்த் ததும்ப எத்தனிக்கிறது
வார்த்தைகளாய் இறக்கி
வைக்கின்றோம்
இந்தப்பணி
உதயத்திற்கும்
அஸ்தமனத்திற்கும்
இடைவெளி தசாப்தம் ஐந்து
யாழில் உதித்த பணி
கொழும்பில் அஸ்தமிக்கும் வரை
பிரகாசம் மட்டும் மங்கவில்லை
மங்கியதெல்லாம்
மாணாக்கர்களின்
மடமை தான்
அவர் எழுதுகோல்கள்-ஒன்று
கவிபாடும்-இல்லையேல்
கணக்குப்போடும்
காலம் அல்லாது மனம் தான்
முதுமையை தீர்மானிக்கும்
என்றிருப்பின்-அவர் தான் நம் யாவரிலும்
இன்றிளையவர்
எழுத்துக்கள் கோர்த்து
சொற்களமைக்க உரிமையில்லையாயினும்
சொற்கள் புனைத்து
கவிதையாக்கும் உரிமையை
கச்சிதமாய் பயன்படுத்திய
தேசம் போற்றும்
தேசிகன் அவர்
அவர் ஓய்வடைவதாலென்ன
அவர் எழுத்துக்கள் ஓய்ந்திடுமா?
அவர் எழுத்துக்கள் மங்காத வரை
அவர் எங்களில் மணப்பார்
ஆறத்தழுவி அனுப்பினாலும்
என்றும் அவர் நினைவுகள்
ஆறாத்தழும்பாய்…
‘ஆசிரியம்’ எனும் சொல்லை
ஆயிரம் முறை சொல்லிப்பாருங்கள்
அவர் பெயர்
உங்களுக்குள்-எதிரொலிக்க
உணர்வீர்கள்
தன் பிரிவால்
தமிழ் பிரிவை துயரடையச் செய்தீர்.
மீண்டு வர முடியா துயரிலிருந்து- மீட்க
மீண்டும் வருவீரென காத்திருக்கும்
ஆசிரியர் குழாம்,
வழியனுப்ப வலிக்கிறது
வாழ்த்திச் சுகமடைகிறோம்.
Post a Comment