Header Ads



கடும் வறுமையில் வாடும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்


கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2019 காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள், முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகி இருந்த போதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30 இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர்.


நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும். இந்த சனத்தொகையில் 2019 ஆகும் போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே வறுமை நிலையில் இருப்பதாக பதிவாகி இருந்தபோதும் தற்போது அந்த சதவீதம் நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு வந்துள்ளது.


அதன் பிரகாரம் ஜனசவி, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற வறுமை நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களின் சதவீதம் நூற்றுக்கு 11.9 இல் இருந்து நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது.


அத்துடன் இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட வற்வரி வீதம் நூற்றுக்கு 18 வரை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் நூற்றுக்கு 27.9 வீதமானவர்கள் 2024ஆம் ஆண்டாகும்போது வறுமை நிலைக்கு ஆளாகும் என உலக வங்கியின் கணிப்பாக இருந்தது.


இதேவேளை, இதுவரை காலமும் வற்வரி விதிப்புக்கு உள்வாங்கப்படாமல் இருந்த எரிபொருள் எரிவாயு போன்ற 79 பொருட்களுக்கு புதிதாக நூற்றுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டதால், இந்த நாட்டில் மிகமோசமான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


அத்துடன் குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த கணக்கு வழக்குகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் உண்மையான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் தீவிரமாகலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


கோவிட் தொற்று மற்றும் 2019இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 3வருட குறுகிய காலத்துக்குள் இந்த நாட்டின் வறியவர்களின் வீதம் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.