ஆரவாரமற்ற ஆளுமை உஸ்தாத் முனீர்
ஸபானா சுகைப் (இஸ்லாஹி)
இறை வேதத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று இறுதி மூச்சுவரை அதனையே போதித்த ஒரு ஆத்மா தன் வாழ்வை நிறைவு செய்திருக்கிறது. மிகச் சிறந்த ஆரவாரமற்ற ஓர் ஆளுமையை இந்த தேசம் இழந்திருக்கிறது.
உஸ்தாத் முனீர் அவர்கள் தான் பொறுப்பேற்ற பணிகளில் வினைத்திறனாகவும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடன் உளத்தூய்மையுடன் இறுதிவரை இறைவனுக்காக பணியாற்றி மரணித்த ஒரு பன்முக ஆளுமை கொண்ட ஒரு மனிதர்.
உஸ்தாத் ஹதிய்யத்துல்லாஹ் முஹம்மது முனீர் 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி புத்தளத்தில் சன்மார்க்க அறிவுப் பின்புலத்தைக கொண்ட குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயாரின் தந்தை மஹ்மூத் ஆலிம் 1985ஆம் ஆண்டு வரை நீண்ட காலம் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றியவர். தாயாரின் இளைய சகோதரர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர். காஸிமியயா அரபுக் கல்லூரியின் தற்போதைய அதிபர்.
உஸ்தாத் முனீர் தனது ஆரம்ப கல்வியை புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் பெற்றார். பின் 1984 முதல் 1990 வரை ஷரீஆ கல்வியை பாகிஸ்தானில் ஜாமிஆ அபீ பக்ர் (கராச்சி) மற்றும் ஜாமிஆ முஹம்மதியா (குஜரன்வாலா) ஆகிய கல்லூரிகளில் கற்றார். ஜாமிஆ முஹம்மதியாவில் ஹதீஸ் துறையில் அவர் பெற்ற பட்டம் பாகிஸ்தான் பல்கலைக் கழகங்களால் முதுமாணி பட்டத்துக்குச் சமமானதாகக் கொள்ளப்படுகிறது.
அவர் 1990 -– 2005ஆம் ஆண்டுவரை புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் முழுநேரமாகவும் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் பகுதிநேரமாகவும் விரிவுரையாளராக கடமையாற்றினார். 2005ஆம் ஆண்டு புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடாத்தினார்.
2016 ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து சுமார் ஒரு வருடம் மருத்துவ விடுமுறையிலிருந்த அவர் மீண்டும் அப்பொறுப்பை ஏற்று 2023 டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை தனது பணியை வினைத்திறனாக செய்து மரணித்தார்கள்.
மரணிக்கும் வரை உஸ்தாத் முனீர் அவர்கள் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபராக தனது பணிகளை ஆற்றினார். இஸ்லாஹிய்யாவை தன் உள்ளத்தில் சுமந்தார்கள். வஹியின் ஒளியில் அதனை வழி நடத்தினார்கள். சமூகச் சீரமைப்பில் பெண்களின் வகிபங்கின் முக்கியத்துவத்தையும் தேவையையும் மிகத் தெளிவாகத் தெரிந்து அதற்கேற்ற வகையில் ஒரு மாணவச் சமூகத்தை உருவாக்க அரும்பாடுபட்டார்கள்.
இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் பெண்கள் கல்வி, பெண் ஆளுமை உருவாக்கம், சன்மார்க்க போதனைகளோடு அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கவும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதற்கு பங்களிப்புச் செய்யும் பெண் ஆளுமைகளையும் வழிநடத்தினார்கள்.
அதிபர் என்ற பதவி ஸ்தானத்திற்கப்பால் அவரால் கல்லூரிக்கு எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கின்றார். அத்தனை பணிகளின் பின்னால் நின்றும் தன்னால் இயன்ற பங்களிப்பைக் கல்லூரிக்குச் செய்யக்கூடியவர். அர்ப்பணிப்போடும் தியாகத்தோடும் தனது சேவையை இறைவனுக்காக உளத்தூய்மையோடு நிறைவேற்றியவர்.
இஸ்லாஹிய்யாவை உள்வாரியாக கற்றலுக்காக வருபவர்கள் மாத்திரம் பயனடையும் வளாகமாக மட்டுமன்றி பெண்கள் தொடர்பான சகல விடயங்களுக்குமான சிந்தனைகளை சமூக ரீதியாக எல்லா மட்டங்களிலும் இருப்பவர்கள் பயனடையும் தளமாக மாற்றுவதென்பது அண்மைக்காலமாக அவரது நோக்கமாக இருந்தது.
பல்துறை சார்ந்த ஆளுமைகளுடனான அவரது அறிமுகம் மற்றும் உறவாடலின் மூலம் கல்லூரியின் மாணவிகளும் பயன்பெற தன்னாலான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு வளவாளர்கள் பலரையும் அழைத்து வருவதும், புத்தளத்திற்கு வருகை தரும் ஆளுமைகளை இனம் கண்டு அவர்களையும் அழைத்து மாணவிகள் பயன் தரும் அமர்வுகளாக பயன்படுத்திக் கொள்வார். மாணவிகளின் ஒழுக்கம் பண்பாட்டு விடயங்களில் மிகவும் கண்டிப்பானவராக இருந்து நெறி பிறழாத ஒழுக்க விழுமியங்களுடன் வழிநடத்தினார். பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்ற வகையில் கல்லூரிக்குள் அவர்கள் விடும் தவறுகளைக் கூட மிகவும் பக்குவமான முறையில் வழிப்படுத்துவார்.
ஆய்வுகள், ஆவணப்படுத்தல்,புத்தகங்கள் எழுதுதல், அது சார்ந்த காட்சிப்படுத்தல்கள் போன்றவற்றில் அதீத ஆர்வம் கொண்டவர். அது தொடர்பான அறிவிப்புலனை தன்னகத்தே கொண்டு மாணவிகளுக்கும் சிறந்த வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். அந்த வழிகாட்டலிற்கிணங்க கல்லூரியில் பல நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இன்னும் சிலர் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கின்றனர். சமகால சிந்தனைகளை சூழலிற்கு ஏற்ப முன்வைக்கும் திறன் மிக்கவர்.
பழமை வாதத்திற்கும் புதுமை வாதத்திற்கும் இடையில் சமநிலை பேணி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியவர். நவீன சிந்தனைகளையும் தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களையும் அதற்கப்பால் தற்காலத்திற்கேற்ப நிகழ்வுகளையும் நல்ல பல அமர்வுகளையும் மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பாடு செய்து கொடுப்பார். அதேவேளை நெறி பிறழாத இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்களை வழிநடத்துவதிலும் மிகவும் கவனமாக இருந்தார். இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் அதிபராக அதன் வளர்ச்சிக்கும் மாணவிகளின் அறிவு ஆளுமை விருத்திக்கும் அவர் காட்டிய கரிசனை வரிகளுக்குள் அடங்காதவை.
உஸ்தாத் மஸ்ஜிதைப் போல நூலகத்தையும் அதிகமாக நேசிக்கக் கூடியவர். வாசிப்பின் மீது அலாதி பிரியம் கொண்ட அவர் புத்தகங்கள் மீதான தீரா காதலன். அவரது வாசிப்புத் திறனைக் காணும் பலரும் வியந்து போகும் அளவு வாசிப்பின் ஊடான ஆழ்ந்த அறிவுப் புலமையையும் கருத்தாழமிக்க சிந்தனையையும் கொண்டிருந்தவர். சில பக்கங்களையேனும் வாசிக்காமல் ஒரு நாளை கடந்து விடாதீர்கள் என்றும் பெருநாள் தினத்தில் கூட சில பக்கங்களையாவது வாசித்து அந்த நாளை பூரணப் படுத்துங்கள் என்றும் விடுமுறை அமர்வில் நினைவூட்டுவார். அவருடையது ஆன்மீக வாசிப்பாக மட்டுமின்றி சர்வதேச அரசியல் இலக்கியம் என பரந்து விரிந்த பன்நூல் வாசிப்பாக இருக்கும்.
வாசிப்பின் ஊடாக கண்ணால் கண்டிராத பழகிடாத பல அறிஞர்களோடு நெருங்கிய உறவாக மானசீகமாக உறவாடி வாழ்ந்திருக்கின்றார் உஸ்தாத் முனீர் அவர்கள். ஆழமான வாசிப்பைப் போல சமகால சூழலுக்கேற்ற வகையிலான கருத்தியல் கொண்டது அவரது எழுத்துக்கள்.வாசிப்பு எழுத்துத் துறையில் மிகுந்த ஈடுபாடு உடைய உஸ்தாத் அவர்கள் சஞ்சிகை ஒன்றுக்கு தொடராக எழுதிய அல்குர்ஆனிய சிந்தனை ஆக்கங்கள் ‘அல்குர்ஆனிய அமர்வுகள்’ என்ற நூலின் ஊடாக தொகுத்து வெளியிடப்பட்டிருக்கின்றது.
அல்குர்ஆனை வெறும் கற்பித்தலுக்காகவன்றி தனது வாழ்க்கை நெறியாக வாழ்ந்து மரணித்ததன் காரணமாகத்தான் அவர் மறைந்தும் மறையாமல் இன்றும் பல்லாயிரம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அவர் நிரப்ப முடியாத தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர். அதிகார தோரணை அற்றவர். மிகவும் எளிமையான தன்னிறைவான பொருந்திக் கொண்ட வாழ்க்கை முறையை வாழ்ந்திருக்கின்றார் என்பதை அவருடன் பழகிய அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.
பல சமயத் தலைவர்களுடனும் பல்துறை ஆளுமைகளுடனும் உஸ்தாத் பேணி வந்த ஆரோக்கியமான உறவுகள் கலந்துரையாடல்கள் ஒரு சிறந்த சமூக சீரமைப்பைக் கட்டியெழுப்புவதில் அவர் கொண்ட மிகுந்த ஈடுபாட்டுக்குச் சான்றாகும்.
இறைவஹி அல்குர்ஆன், தப்ஸீர் வகுப்புகள், இஸ்லாமிய அமர்வுகள், குத்பா பிரசங்கங்கள், சமூக மேம்பாட்டுக்கான கலந்துரையாடல்கள், சர்வதேச அரசியல் சிந்தனைகள் என பல வழிகளிலும் இயன்ற அளவு தன் பங்களிப்பை சமூகத்திற்கு செய்திருக்கின்றார்.
அவரின் ஜும்ஆக்கள் தனித்துவமானவையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் கருத்துச்செறிவுடன் சமகால சூழ்நிலைக்கு பொருத்தமானதாகவும் இருந்திருக்கிறது.
உஸ்தாத் அவர்கள் இஸ்லாஹிய்யாவுக்கு வெளியிலும் செயற்பட்டு இருக்கின்றார்கள். புத்தளம் சமூக நல பணிகளிலும் தன்னாலான பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.
கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்திற்குமான புத்தளம் கல்வியியலாளர்கள் மன்றத்தின் இணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்து இறுதிவரை சமூக உருவாக்கத்திற்காக காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்.
இஸ்லாமிய உம்மத் எழுச்சி பெறுவதற்கான வழிகாட்டல் அமர்வுகளினூடாக இஸ்லாமிய உம்மத் மீதான கரிசனைகள் உஸ்தாத்தின் மனதில் அதிகமாக இருப்பதை உணர்ந்திருக்கின்றோம்.
இறை நெருக்கமும் திருப்தியும் தேடி தெளிந்த மனம் அவருடையது. கடினமான சூழ்நிலைகளில் கூட இறைவனின் விதியில் அதிருப்தி அடையாமல் பொருந்திக் கொண்டார் என்பதை மறுக்க முடியாது.
2016ஆம் ஆண்டு உஸ்தாத் அவர்கள் ஈரல் புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரைக் காப்பாற்ற முடியாது என பல வைத்தியர்களும் ஒதுங்கிக் கொண்டனர். ஆனாலும் உஸ்தாத்துக்காக இறைவனிடம் உயர்ந்த பல்லாயிரம் கரங்களின் பிரார்த்தனைகளையும் சிந்திய கண்ணீரையும் அவர் மீதான சமூகத் தேவைகளையும் இறைவன் பொருந்திக் கொண்டான். சென்னையில் இருக்கும் பிரபல ஈரல் புற்றுநோய் நிபுணர் முஹம்மத் ரிலா அவர்கள் மேற்கொண்ட நுட்பமான சத்திர சிகிச்சையின் விளைவாக உஸ்தாத் முனீர் அவர்கள் சுகம் பெற்று மீண்டார்கள்
இருந்த போதிலும் ஏழு வருடங்களின் பின் உஸ்தாத் மீண்டும் நோயுற்றார். புற்றுநோயிலிருந்து முழுமையாக நீங்கிய போதும் அதன் விளைவாக ஈரலில் ஏற்பட்டிருந்த சேதங்களின் காரணமாக அவரது ஈரல் வாயி நாளத்தில் இரத்த அமுக்கு அதிகரிப்பு (Portal vein hypertension) ஏற்பட்டது. அமுக்கு அதிகரிப்பு காரணமாக காலப்போக்கில் நாளங்கள் வீங்கி நாளச் சுவர் பழுதடைவதால் அகக்குருதிப் பெருக்கு (Internal bleeding) ஏற்படும். உஸ்தாத் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டபோது இரத்தம் ஏற்றப்பட்டு அவரது நிலை சீராக்கப்பட்டது.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உஸ்தாத் அவர்களுக்கு endoscopy நுட்ப மதிப்பீடு தேவைப்பட்டது அங்கு அந்த வசதியின்மையால் அவர் குருநாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கட்டுப்படுத்த முடியாத அளவு குருதிப் பெருக்கு மீண்டும் ஏற்பட்டதனால் உஸ்தாத் முனீர் அவர்கள் கடந்த 2023 டிசம்பர் 19ஆம் திகதி வைத்தியசாலையிலேயே மரணம் அடைந்தார். மிகச் சிறந்த ஆளுமை ஒன்று எம்மை விட்டு விடைபெற்றது.
இஸ்லாமியப் பணியை இதயத்தால் நேசித்து இறுதி மூச்சு வரை உறுதியாக அதனை சுவாசித்தவர். பணிகளையும் பொறுப்புகளையும் சுமந்து தன் உடல் ஆரோக்கியத்தையும் தாண்டி அதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். செயல் வீரராக இயங்கி பல்லாயிரம் இதயங்களில் நிலைத்திருப்பவர். சிந்தனைகளாலும் அறிவாற்றலாலும் சிறந்த உறவாடல்களால் பல இளைஞர்களின் உள்ளத்தை அல்லாஹ்வின் பால் திசை திருப்பியவர்.அல்குர்ஆனை கற்பித்தவர் இயன்றவரை அதன் போதனைகளில் வாழ்ந்தவர் வழிகாட்டியவர் இஸ்லாஹிய்யாவை அதிகமதிகம் நேசித்தவர் அதற்காகவே இறுதிவரை உழைத்தவர். நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட இறை நியதியை திருப்தியாய் ஏற்றுக் கொண்டவர்.
சமூகத்தில் மட்டுமன்றி தனது குடும்பத்திலும் மிகச் சிறந்த ஒருவராக தனது பணிகளை நிறைவேற்றியிருக்கின்றார். அறிவு ஆளுமை ஒழுக்கம் உள்ள ஒரு குடும்பத்தை நெறிப்படுத்தி இந்த சமூகத்தில் பணியாற்றுவதற்காக அவர்களையும் செதுக்கியிருக்கின்றார்.தான் பொறுப்பேற்ற எல்லா நிலைகளிலும் கணிசமான அளவு நல்ல பல விளைவுகளை தந்திருக்கின்றார்.
ஸதக்கத்துல் ஜாரியாவாக அவர் கற்பித்தலில் வழிகாட்டலில் உருவாகிய அவரது பிள்ளைகள், உறவுகள், இஸ்லாஹிய்யா மாணவிகள், பயன் பெற்றவர்கள், கற்றவர்கள், சமூகத்தின் பல மட்டங்களில் மனித வளங்களாக தங்களது காத்திரமான பங்களிப்புகளை செய்து வருகின்றார்கள். அதற்கான கூலியையும் நிரப்பமாக அவருக்கு வல்ல ரஹ்மான் வழங்கி வைப்பானாக.
- Vidivelli-
Post a Comment