பாலஸ்தீனமே நாங்கள் வருகிறோம்..
புதிய பாலஸ்தீன விடியலில்.
கலங்காதே காசா..
அகில தெருக்களில்
இஸ்ரேயேல் சிறைகளில்
மேற்குக்கரையில் அகதியாய் அலைகிற
பாலஸ்தீனிய ’உம்மத்’
ஓங்கி ஒலிக்கிற விடுதலைப் பாடலும்
எஞ்சிய போர்வாளும் நீ அல்லவா.
*
காசா இனி உன் பிள்ளைகள்
இடிபாடுகள் விலக உயித்தெழுவார்கள்.
குழந்தை கொல்லும் கொடியவர் உலகில்
நொருங்கி எரிகிற ஊர்கள் மத்தியில்
நெருப்பை அணைத்து புகையை விலக்கி
ஆறுதலாகுமுன் மேலைக் காற்றையும்
தாய்மையோடுன் கண்ணீர் துடைத்து
இரத்தக் கறைகளை கழுவி நீராட்டும்
மத்தியதரைக் கடலையும் வாழ்த்துகிறேன்.
*
உலகம் இனியும் வேடிக்கை பார்க்காது..
செங்கடலில் சுனாமிகளாக
நாங்கள் வருகிறோம்
லெபனான் ’லிற்றானி’ நதியைக் கடந்து
எரிமலை கனலும் கவண்கள் சுழல
தாவீதுகளாக நாங்கள் வருகிறோம்.
கோலியாத்தின் இரும்பு கவசம் பொய்த்தது.
*
காசா
உனக்காக உலகம் வீதியில் இறங்கியது.
இனி யோர்டான் நதிக்கும்
மத்தியதரை கடலுக்கும் நடுவே
ஒரு புதிய வரலாறு உருவாக்கப்படும்,
இனி உன் ’உம்மத்’
காசாவை சூழ்ந்த இருளின் கருமையும்
காசாவில் எழுகிற விடியலின் வெண்மையும்
காசா சிந்திய குருதியும் தோய்ந்த
மூவர்ணக் கொடிகளுடன் எழும்.
*
உனது கொடி பலஸ்தீனர்களுக்கு மட்டுமல்ல
யூதர்களுக்கும்கூட நிழல் தரும் அல்லவா?.
அதற்காகத்தானே உனது ‘உம்மத்’
எழுதசாப்தங்கள் போராடியது.
*
என்னைப்போல
ஒடுக்கும் போரை உதைத்தெழுந்த
உலக கவிஞர்கள் சார்பாக பாடுகிறேன்.
வாழிய காசா, மானுடம் வெற்றியென
மூவர்ணக் கொடி உயர்த்தி
மீண்டெழுக பாலத்தீனம்.
உம்மத் - இனக்கூட்டம்
Post a Comment