Header Ads



ஒருபக்கம் சிரித்த, மறுபக்கம் கோர முகத்தையும் கொண்டவரே மஹிந்த - கபீர்


“பெரஹராவின் போது கொண்டு செல்லப்படும் 'மகாபபா' உருவத்தை போன்று ஒருபக்கம் சிரித்த முகத்தையும் மற்றைய பக்கம் கோர முகத்தையும் கொண்டவரே மஹிந்த ராஜபக்‌ஷ” என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசனையை இல்லாது செய்வதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே கபீர் ஹாசீம் இவ்வாறு கூறினார்.


மேலும் அவர், “அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற தீர்மானங்களினாலேயே நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்பதனை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வற் வரி அதிகரிப்பு மற்றும் புதிதாக பொருட்கள் மீது வரிகளை அறவிடுவதால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார சீர்குலைவால் கட்டிட நிர்மானத்துறை, மத்திய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. 

முடிந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், எஞ்சியுள்ள மக்கள் தமது பசிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றர். 


இந்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, கடன், வறுமை, தொழில் இல்லாமை, கல்வி வீழ்ச்சி உள்ளிட்ட ‘வற்’க்கு தீர்வு காண முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.


நாட்டை வங்குரோத்துக்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காது இந்த அரசாங்கம் அவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதும் நாட்டு மக்களுக்கே தண்டனையை வழங்குகின்றது. வரி கொள்கையை அரசாங்கம் பின்பற்றுகின்றது. இதில் அசாதாரணமான வகையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.


சர்வதேச நாணய நிதியம் கூறுவதை அப்படியே செய்யத் தேவையில்லை. எங்களால் முடிந்தவாறு செய்யலாம். அப்படி செய்ய முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திற்கே நாட்டை கொடுத்து விடலாமே. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியம் அரச வருமானத்தை அதிகரிக்குமாறே கேட்டுள்ளது. அதன்போது வரிகளை அதிகரிக்கும் போது செல்வந்தர்களுக்கான வரியை அறவிடவே கூறியுள்ளது. ஆனால் இவர்களுக்கு வரியை அறவிட நடவடிக்கை எடுக்காது பொதுமக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ளது.


VAT வரி அதிகரிக்கும் போது அதற்கு ஆதரவாக கையுர்த்தியவர்கள் இப்போது அதுபற்றி கதைக்கின்றனர். இந்த பாராளுமன்றத்தில் பொலிவூட், ஹொலிவூட்டில் இல்லாத நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிறந்த நடிகர் மஹிந்த ராஜபக்‌ஷவே ஆகும். 


அவர் முதலில் ஆதரவாக கையுயர்த்திவிட்டு, இப்போது வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு என்று தெரிவிக்கின்றார். ஆடை அணிந்துகொண்டா இந்த சபையில் இருந்து அதனை ஆதரித்தீர்கள் என்று கேட்கின்றேன். 

No comments

Powered by Blogger.