யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - ரணில்
வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் சுட்டிக்காட்டினார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வடமாகாண பாதுகாப்புப் பிரிவினரின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்கள் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுரம் மற்றும் கண்டியை மையப்படுத்தி பௌத்த சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் தெற்கு கைலாயத்தை மையப்படுத்தி இந்து சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அது பற்றிய அறிக்கையை அவருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த செயற்பாடுகள் பெரும் உறுதுணையாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடமாகாண சமய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வடமாகாண ஆளுநரிடம் அனைத்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
யாழ்ப்பாண சர்வமதக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது பரிந்துரைகளைக் கையளித்தது.
அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு மதத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அனைத்து சமய திணைக்களத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
வடமாகாணத்தில் உள்ள அனைத்து மக்களினதும் மத உரிமைகளைப் பெற்று, அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டிய மதத் தலைவர்கள், அவர் வடக்கிற்கு தொடர்ந்து விஜயம் செய்து மக்களின் தேவைகளைக் கண்டறிய எடுக்கும் நடவடிக்கைகளைக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய யாழ் நாக விகாரையின் விகாராதிபதி. மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரர், நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இன்று அதனை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அனைத்து சமயத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய தேரர், ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் அனைவராலும் ஆசீர்வதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அருட் தந்தை பீ.ஜே. ஜெபரட்னம் அவர்களும் இங்கு அறிவுரை வழங்கியதுடன், கடந்த காலத்தில் வளமான மாகாணமாக இருந்த வடக்கு அவசியமான அபிவிருத்தியல்ல, மீள் அபிவிருத்தியே ஆகும். என சுட்டிக்காட்டினார். யுத்தம் மற்றும் அபிவிருத்தியை விட நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது மிகவும் கடினமான பணி என சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தை பாராட்டியதுடன் எதிர்கால பணிகளுக்கு தனது ஆசிகளையும் வழங்கினார்.
சிவஸ்ரீ கந்தையா குருக்கள் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்ததுடன், அனைத்து மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த அரசியல் உறுதிப்பாடு அவசியம் எனவும் தெரிவித்தார். அந்த உறுதியும் பலமும் ஜனாதிபதியிடம் இருப்பதாக சுட்டிக்காட்டிய சிவஸ்ரீ கந்தையா குருக்கள், இந்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் மத நல்லிணக்கத்தைப் பாதுகாத்து புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு மதத் தலைவர்கள் தமது ஆசிகளை தெரிவித்தனர்.
ஆர். ஏ. ரலீம் மௌலவி உட்பட சர்வ மதத் தலைவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
06.01.2024
Post a Comment