அறிவு, பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்
களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று (31) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் மிக முக்கியமானது. அத்தகைய தர்மத்தின் ஆழத்தை அறிந்து அதனை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையைச் சார்ந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்காக தேரவாத பௌத்த ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிறுவனங்களுக்கு தேரவாத பௌத்தத்தை உலகிற்கு கொண்டுச் செல்லவும், பௌத்த நாடுகளுடனான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குமான இயலுமை உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப யுகத்திற்கு தேவையான வகையில் இலங்கையின் கல்வியை பலப்படுத்த எதிர்பார்ப்பதோடு, அனைத்து பல்கலைக்கழங்களிலும் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க மாணவர் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கான காணியையும் அரச அனுசரணையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு உதவிய வௌிநாட்டு நன்கொடையாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு பரிசுகள் வழங்கினார்.வைக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
"2019 ஆம் ஆண்டில் இந்த கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டிடத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதியாக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டிட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன. வித்யாலங்கார பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு ரதனசார தேரர் முன்னெடுத்திருந்த செயற்பாடுகள் சிறப்பானவையாகும். அதேபோல் கொடபிடிய ராஹுல நிறுவனத்தின் தேரரும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் முக்கியமானவை. அவற்றை ஆழமாக ஆராய்ந்து உலகவாழ் மக்களுக்கு வழங்குவதற்காக இந்நிறுவனம் பெரும் பணிகளை ஆற்ற முடியும். இந்த நிறுவனம் நிறுவப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது.
பௌத்த நாடுகளில் மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் தேரவாத பௌத்தத்தைப் பற்றிய தெரிவை வழங்கக்கூடிய பொறுப்பு எமக்கு உள்ளது. மேலும், இந்த நிறுவனங்களின் மூலம் தேரவாத நாடுகளிடையே உறவுகளை வலுப்படுத்த முடியும்.
மகா விகாரையின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லும்பினியில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட மாயாதேவி குழுவினரே அந்தப் பணிகளை செய்கிறார்கள். அதேபோல பௌத்த தர்மத்தை ஆழமாக ஆராய்வதற்கான ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவ எதிர்பார்க்கிறோம். அது தொடர்பிலான அறிக்கை இவ்வருட இறுதிக்குள் கிடைக்கும். அரசாங்கம் என்ற வகையில் தேரவாத பௌத்தத்தை உலகிற்கு கொண்டுச் செல்ல அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதனால் சர்வதேச பௌத்த நாடுகளுடனான தொடர்புகள் வலுவடையும்.
அதன் ஒரு அங்கமாக தாய்லாந்து பிரமருடன் இரு பௌத்த நாடுகளான இலங்கை - தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
அதேபோல் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாகவும் பௌத்த தர்மம் தொடர்பில் தேடியறிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு செயற்கை நுண்ணறிவு உதவும். கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.
தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன. தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம். அறிவு மற்றும் பண்புமிக்க சமூகத்தின் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Post a Comment